ஈஷாவின் ரூ.10 ஆயிரம் கோடி வசூலும் காவேரி கூக்குரலும்! டைட்டானிக் ஹீரோவை குறிவைக்கும் 95 அமைப்புகள்!

சென்னை: காவிரி ஆற்றை பாதுகாப்பதாக ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்துள்ள ஏமாற்று திட்டத்திற்கு துணை போகக்கூடாது என, நடிகர் டி ப்ரியோவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


ஈஷா அறக்கட்டளை சார்பாக, காவிரி ஆற்றை பாதுகாப்பதாகக் கூறி, சத்குரு ஜக்கி வாசுதேவ்  ஒவ்வொருவரிடமும் ரூ.42 வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக, ஹாலிவுட் நடிகர் லியோ டி கேப்ரியோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்திய ஆறுகள் பலவும் மாயமாகி வரும் நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து, காவிரி ஆற்றை பாதுகாக்கும் பணியை முன்னெடுப்போம், அனைவரும் வாரீர், என அவர் கூறியிருந்தார்.  இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 95 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 19 தனிநபர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு விரிவான கடிதம் ஒன்றை லியோ டி கேப்ரியோவுக்கு எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ''காவிரி ஆற்றை பாதுகாக்க நீங்கள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், சத்குரு நடத்தும் ஈஷா அறக்கட்டளைக்கு விளம்பரம் செய்வது போல நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதியது தவறான விசயமாகும். அவர் ஒரு மோசடி ஆசாமி. அவர் செய்ய உள்ள Cauvery Calling எனும் திட்டம் உண்மையில் காவிரியை பாதுகாப்பதல்ல.

அது ஒரு ஏமாற்று திட்டம். இதனை நீங்களும் உண்மை என நம்பி ஏமாந்தது வியப்பாக உள்ளது. உடனடியாக, அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுங்கள்,'' என்று வலியுறுத்தியுள்ளனர்.