3 ஆண்டுகளில் 9 தற்கொலைகள்! சவக்கிடங்காக மாறிக் கொண்டிருக்கும் மெட்ராஸ் ஐஐடி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னை ஐஐடியில் மட்டும் 2016ம் ஆண்டு முதல் 2019 வரை 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


ஐஐடியில் நடைபெறும் தற்கொலைகள் எதிர்கால மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உயர்கல்வி பயிலுவதற்கான தகுதியற்ற கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி மாறிவிடுமோ என்றும் மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அங்கு நடைபெறும் காரணங்கள் வெளிவராத தற்கொலைகள்தான். தேர்வில் தோல்வி அடைவதால்தான் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக பூசி முழுகினாலும் உண்மையான பிரச்சனை என்ன என்று ஆராய யாருக்கும் இங்கு நேரம் இல்லை. அக்கறையும் இல்லை.  

கடந்த 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டும் இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதே தெரியவில்லை.

2016 முதல் வெளியான செய்திகளின் அடிப்படையில் 9 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 2 பேர். 2018ம் ஆண்டு மலப்புரத்தைச் சேர்ந்த ஷாகுல் கோர்நாத், வருகை பதிவேடு பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 2019ல் மட்டும் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்டெக் மாணவர் கோபால் பாபு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக என போலீஸார் கூறியிருந்தனர். பின்னர் ஜார்கண்ட்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவர் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. 2018ம் ஆண்டு டிசம்பரில் அதிதி சிம்ஹா என்ற இயற்பியல் உதவிப் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பப் பிரச்சினை என கூறப்பட்டது. இதுதவிர ஒரு ஆய்வு மாணவர், 2 பட்டதாரி மாணவர்கள், ஒரு ஊழியரின் மனைவி ஆகியோரும் சென்னை ஐஐடியில் 2016ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டினாலும், இதுபோன்று விபரீதங்கள் இனியும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது ஐஐடி நிர்வாகத்தின் பொறுப்பு.