அம்மா கொண்டையில் இருக்க வேண்டிய கிளிப்..! 9 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய பகீர் சம்பவம்! பிறகு?

9 மாத குழந்தை ஒன்று பெண்கள் தலையில் மாட்டிக்கொள்ளும் கிளிப்பை விழுங்கிய சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே தளவாய்புரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு 9 மாதங்களான அழகான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் வினிஷ்கா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தபோது பெண்கள் தலையில் மாட்டிக்கொள்ளும் கிளிப்பை அந்த குழந்தை தவறுதலாக வழங்கியுள்ளது.

குழந்தையின் தொண்டையில் கிளிப் சிக்கிக்கொண்டதால், குழந்தை மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளது. தொடர்ந்து வலியால் குழந்தை அலறி துடித்துள்ளது. குழந்தையை ஏதேனும் பூச்சி கடித்துவிட்டதா என்று தாயார் பார்க்க, அதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. பின்னர் குழந்தையின் வாயை திறந்து பார்த்தபோது தொண்டையில் மாட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தன்னுடைய கணவரை அழைத்துக்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை அழைத்து சென்றார்.

ஆனால் கிளிப்பை அகற்றுவதற்கு அந்த மருத்துவமனையில் போதிய வசதியில்லை என்பதால், வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். உடனடியாக அருகேயிருந்த தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் வசதி இல்லாத காரணத்தினால் குழந்தையை நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.

கார் ஓட்டுநர்களை அணுகியபோது, ஊரடங்கின் காரணமாக கார் செல்லாது என்று கூறியுள்ளனர். உடனடியாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஒருவழியாக மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் குழந்தையை எடுத்து சென்றனர்.

அங்கு வரும்போது குழந்தை லேசான மயக்க நிலையில் இருந்துள்ளது. உடனடியாக காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை வரவழைத்து குழந்தைக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. பரிசோதனையில் தொண்டையில் மிகவும் சிக்கலான பகுதியில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்டோஸ்கோபி சிகிச்சையின் மூலம், குழந்தையின் தொண்டையில் இருந்து லாவகமாக மருத்துவர்கள் கிளிப்பை வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய குழந்தையின் உயிரை காத்த மருத்துவர்களுக்கு பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.