பாக்கியங்கள் தரும் சிவபெருமானுக்குரிய ஒன்பது முக்கிய விரதங்கள்

பௌர்ணமி நாட்கள் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக கருதப்படும் நாட்களில் ஒன்றாகும்.


துர்க்கை காளி முதலான சக்திகளை வழிபடுபவர் சிலர். சிவபெருமானுடைய வடிவங்களான ஸ்ரீ சரபர், பைரவர் முதலான திருக்கோலங்களை வழிபடுவதும் உண்டு. நிறைமதி நாள் எனப்படும் பௌர்ணமி சிவனை நினைத்து விரதமிருந்து வழிபடுவதற்குரிய நாட்களில் ஒன்றாக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விரதத்தை மார்கழி மாதம் தொடங்குவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விசேஷமான அபிஷேகம் இடம்பெறும். சிவபெருமானுக்கு பவுர்ணமி நாட்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள்.

பங்குனி மாதம் பௌர்ணமியில் மஞ்சள் பட்டாடை அணிவிப்பார்கள். நூறு வஜ்ர மணிகள் கொண்ட மாலையை சாத்துவார்கள். மகிழம் பூக்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். மற்றும் தயிரால் அபிஷேகிப்பது விசேஷ இடத்தைப் பெறுவதாகும். பங்குனி மாதம் ஹோமம் வளர்த்து அபிஷேகம் செய்ய விரும்புவோர் ஹோம குண்டத்தை அர்த்த சந்திர காலமாக, அதாவது பிறை சந்திரன் வடிவில் அமைக்க வேண்டும். தாமரை, காசி தும்பை மலர்களை மாலைக்கும், அர்ச்சனைக்கும் பயன் படுத்தவேண்டும். சுவாமிக்கு வெள்ளையும் மஞ்சளும் கலந்த வஸ்திரம் சாத்த வேண்டும். பிட்டு படைக்க வேண்டும். இப்படியாக வழிபட புத்திர பிராப்தியும், ஐஸ்வர்ய பிராப்தியும் கிடைக்கும் என்கிறது காரணாகமம். ஆலயங்களில் பசுந்தயிர் அபிஷேகித்து சம்பா சாதம் படைப்பது வழக்கத்தில் உள்ளது.

உத்திர நாளில் அதாவது பௌர்ணமியுடன் கூடிய உத்திரத்தில் நடைபெறும் திருவிழாவை தரிசித்து வணங்குபவர்கள் இன்மையில் அனைத்தும் பெற்று மறுமையில் முக்தி அடைவார்கள் என்கிறது பேரூர் புராணம். பங்குனி பவுர்ணமி நாளிலும் உத்திர நாளிலும் சிவனை வழிபட எல்லா பேரும் கிட்டும்.

மனித மனத்தைப் பக்குவப்படுத்துபவன விரதங்கள். விரதமிருப்பதால் அகமும் புறமும் தூய்மை அடைவதோடு மனதில் உறுதி ஏற்படும். பக்தி வைராக்கியம் அதிகரிக்கும். சிவபெருமானை துதித்து மேற்கொள்ளும் விரதங்களில் 9 விரதங்களை தலையானதாகச் சொல்வார்கள்.

ஒவ்வொரு வாரத்திலும் மேற்கொள்ள வேண்டிய விரதம் சிவனுக்குரிய வாரமான சோமவார விரதம். ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசியுடன் கூடிய மாலையில் அனுஷ்டிக்க வேண்டியது பிரதோஷ விரதம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் மேற்கொள்ள வேண்டியது மாத விரதமாக சிவராத்திரி விரதமாகும். நட்சத்திர அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் அனுஷ்டிக்க வேண்டியது திருவாதிரை விரதம் ஆகும். இது சில மாதங்களில் இரண்டு முறை வருவதுண்டு. இந்த விரதங்கள் எல்லாம் பல நாட்கள் அனுஷ்டிக்க வேண்டியவை.

வருடம் ஒருமுறை அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள் உமாமகேஸ்வர விரதம், கோதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம் முதலியனவாகும். இவற்றுள் பங்குனி உத்திர நட்சத்திர நாளில் கல்யாணசுந்தர விரதம் இருக்க வேண்டும். பௌர்ணமியுடன் கூடிய உத்திர நாளில் இருக்க வேண்டிய விரதம் இது. பௌர்ணமியும், உத்திரகும் வெவ்வேறு நாட்களில் வந்தால் உத்திர நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அன்று விரதம் இருக்க வேண்டும். கல்யாண சுந்தரரை பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து வழிபட திருமண வாழ்க்கை விரைவில் கூடிவரும். திருமணத் தடைகள் அகலும்.

உங்கள் ஜனன காலத்தில் குரு பகவான் தனித்திருந்தால் அது கடுமையான குருதோஷம் ஆகும். இப்படி அமைந்த ஜாதகக்காரர்கள் தவறாமல் ஆண்டு தோறும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருப்பனந்தாள் ஆகும். பங்குனி உத்திர நாளில் மாலை நேரம் சுவாமி அம்பாளுக்குக் குருவாக வந்து பஞ்சாட்சர உபதேசம் செய்வார். பின் பலகாரக் கொள்ளை நடக்கும். இந்த விழாவில் பங்கேற்பதும், திருப்பனந்தாளில் பிரம்மோற்சவம் நடக்கும் நாக கன்னிகை நடத்தும் திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசனம் செய்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இது குருதோஷத்தை அகற்றக் கூடியதாகும்.