இந்த ஊரில் வசிப்பது வெறும் 800 பேர் தான்! ஆனால் வந்து செல்வது 10 லட்சம் பேர்! அப்படி என்ன விஷேசம்?

பாரிஸ்: 800 பேர் மட்டுமே வசிக்கும் கிராமத்தை பார்க்க லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.


ஆஸ்திரியா நாட்டில் உள்ளது ஹால்ஸ்டட் என்ற கிராமம். அழகிய கிராமமான இங்கு, 800 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், சிறிய கிராமமான இது அந்நாட்டின் சுற்றுலாவில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. ஆம். இந்த கிராமத்தைச் சுற்றி பார்க்க ஆண்டுதோறும் சராசரியாக 10 லட்சம் பேர் வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தபடியே உள்ளதால், ஹால்ஸ்டட் கிராமத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அந்த ஊரில் அப்படி என்ன உள்ளதென கேட்கறீர்களா, அங்கே உப்பு ஏரி, சுற்றிலும் பசுமை போர்த்திய மலை, ஆல்பைன் வீடுகள், பளிங்கு அருவி,  மலையை குடைந்து சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை உள்ளிட்டவைதான் உள்ளன.

இவற்றை பார்க்கத்தான் அடிக்கடி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, சீனாவில் இருந்து ஹால்ஸ்டட் கிராமம் வருவோர் மிக அதிகமாக உள்ளனர். இந்த ஹால்ஸ்டட் கிராமத்திற்கு வரும் யாரும் எளிதில் அதன் இயற்கை உலகில் ஒன்றிவிடுவார்கள் என, உள்ளூர் வாசிகள் பெருமை பொங்க தெரிவிக்கின்றனர்.

எங்கோ மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தால் லட்சக்கணக்கான டாலர்களில் சுற்றுலா வருமானம் கிடைப்பதால், ஆஸ்திரிய அரசும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.