எட்டுப் பிள்ளைகளை பெற்றும் நடுரோட்டில் வீசப்பட்ட வயது முதிர்ந்த தாய்..! நேரில் சென்று போலீசார் செய்த நெகிழ்ச்சி செயல்!

ஜெயங்கொண்டம்: பெற்ற தாயை கைவிட்ட மகன்களை திருத்த போலீசார் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து பாராட்டுகளை பெற்றுள்ளனர்.


ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், சுலோச்சனா 5 மகன்கள், 3 மகள்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், மகன்கள் ஒவ்வொருவராக பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட, மகள்களும் திருமணமாகி சுற்றுப்புற கிராமங்களில் தங்களது குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டனர்.

இதனால், முதுமையில் வாடிய சுலோச்சனாவை பராமரிக்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. திருப்பூர் சென்ற சுலோச்சனாவை அவரது மகன்கள் மீண்டும் கொண்டுவந்து கவரப்பாளையத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். இருந்தாலும் தாய்ப்பாசம் விடாத நிலையில் சுலோச்சனா, தனது மகள்கள் வீட்டிற்கேனும் செல்ல தீர்மானித்தார்.

அதன்படி, வீட்டில் இருந்து புறப்பட்டு ஜெயங்கொண்டம் சென்றவருக்கு அதன்பின் எங்கே செல்வது என முதுமை காரணமாக ஞாபக மறதி வந்துவிட்டதாம். இதில் குழப்பத்துடன் அங்கேயே சுற்றி திரிந்தவர் மீது வாகனம் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.  

அவ்வழியே வந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆண்டிமடம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பின், அவரது மகன்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். ஆனால், 5 மகன்களில் ஒருவர் கூட தங்களது தாயை ஏற்று பராமரிக்க முன்வரவில்லை. ஒரே இழுப்பறியாக முடிந்த நிலையில் தாயை கவரபாளையம் கிராம பஸ் ஸ்டாப்பில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களாம்.  

அநாதையாக முதுமையில் வாடிய மூதாட்டி பற்றி சுற்றுப்புற கிராம மக்கள் அரியலூர் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்படி ஆண்டிமடம் போலீசார் 108 ஆம்புலன்ஸ் அனுப்பி, சுலோச்சனாவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

இதுதவிர, அவரது மகன்கள் அனைவரையும் வரவழைத்து, தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ள போலீசார், அப்படி யாரும் ஏற்கவில்லை எனில் வழக்கு தொடரப் போகிறோம் என, தெரிவிக்கின்றனர். முதுமையில் வாடும் தாயை பராமரிக்காத பிள்ளைகள் நாட்டிற்கும் கேடு, எதிர்காலத்திற்கும் கேடு என்று போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.