இளம் பெண்ணுடன் எஸ்கேப்பான இளைஞனின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்! உடைகளை களைந்து மரத்தில் கட்டி வைத்த கொடூரம்!

சாதிவெறி மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கும் சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. பிரியா என்னும் பெண் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர். விவேக் என்பவர் பெண்ணாகரம் பகுதியில் வசித்து வரும் நாவிதர் சமுதாயத்தை சேர்ந்தவராவார். கடந்த 8 வருடங்களாக இருவரும் இருவீட்டாருக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.

21-ஆம் தேதி அன்று கல்லூரியில் பட்டப் படிப்பிற்கான படிவத்தை அளித்து விட்டு வருவதாக கூறி பிரியா வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அன்று முழுவதும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் காணவில்லை என்று அப்பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் வாழும் பகுதிகளில் நாவிதர் குடும்பங்களை காட்டிலும் வன்னியர் குடும்பங்கள் 10 மடங்கு அதிகமாக உள்ளனர். தகவலறிந்த  விவேக்கின் குடும்பத்தினர் பயந்துகொண்டு  தலைமறைவாயினர். 

பிரியாவின் குடும்பத்தினருக்கும் அவர்கள் இருவரும் உறவில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சல்லடை போட்டு தேடி ஒரு வழியாக விவேக்கின் குடும்பத்தினரை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் சமாதானம் பேசுவதாக கூறி விவேக்கின் குடும்பத்தினரை பெண்ணாகரம் அழைத்து வந்தனர்.

சமாதானம் பேசாமல் அவர்களை சித்திரவதை செய்ய தொடங்கினர். ஆண்களின் ஆடைகளை உருவியும், பெண்களின் சேலையை உருவியும் மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர். பின்னர் மாலை நேரத்தில் அவர்களை விடுவித்தனர். விவேக்கின் குடும்பத்தினர் வலி தாங்காமல் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தனர்.

விவேக்கின் அம்மாவிற்கு நெஞ்சுப் பகுதியிலும் வயிற்றிலும் பலத்த அடி விழுந்துள்ளது. விவேக்கின் அண்ணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே தர்மபுரி காவல்துறையினர் அத்தகைய நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

வேலைவெட்டி இல்லாதவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். குடும்பத்தினரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டோம். இன்னும் பிரியா மற்றும் விவேக்கின் இருப்பிடத்தை மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும். அதனை செய்தால் வழக்கு நிறைவு பெற்றுவிடும் என்று கூறியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சாதிய வெறி கொண்ட மோதல்கள் அவ்வப்போது நடைபெறுவதை கண்டு மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.