பள்ளிக்கூட மாடியில் இருந்து விழுந்த மாணவி! உயிருக்கு துடிதுடித்த பரிதாபம்! ஆசிரியர்கள் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

திருச்சி அருகே பள்ளி இரண்டாம் தளத்தில் இருந்து கீழே தவறி விழுந்த 7ம் வகுப்பு மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறையூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி இலக்கியா,  மெத்தடீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவி இலக்கியா எதிர்பாராத விதமாக  மாடியில் இருந்து தவறி கீழே  விழுந்து உள்ளார்.

இதனை அடுத்து,  மாணவி இலக்கியா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மாணவி மாடியில் இருந்து விழுந்தவுடன், அவரை உடனடியாக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காமல், பெற்றோர் வரும் வரை ஆசிரியர்கள் மெத்தனமாக இருந்ததைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

,உரிய நேரத்தில் மாணவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என குற்றம் சாட்டிய மாணவியின்  உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நேரம்  பதற்றம் நிலவியது.