படி படி என பெற்றோர் டார்ச்சர்! 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீத முடிவு!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பெற்றோரின் சர்வதேச பள்ளி மோகத்தால் 13 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனுர் கூட்ரோட்டில் வசிப்பவர்கள்  திருமுருகன்- மனமல்லி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் 13 வயதான பிரசன்னா.

 

பிரசன்னா விழுப்புரம் திருக்கோவிலூர் பகுதியில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் பெற்றோருக்கு மகனை திருவண்ணாமலையில் உள்ள விக்னேஷ் இண்டர்நேசனல் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று ஒரே ஆசை.

 

ஆனால் பிரசன்னாவிற்கோ திருக்கோவிலூரிலேயே தொடர்ந்து படிக்க விருப்பம். ஆனால் பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் வேறு வழியில்லாமல் திருவண்ணாமலை சென்று படிக்க பிரசன்னா முடிவெடுத்தார்.

 

ஆனால் திருவண்ணாமலை விக்னேஷ் இன்டர்நேசனல் பள்ளியில் சேர்க்கை கிடைக்க வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.   தனையடுத்து, கடந்த வாரம் திருவண்ணாமலை சென்று தனது பட்டி வீட்டில் தங்கி, நுழைவுத் தேர்வுக்கு பிரசன்னா தயாராகி வந்துள்ளான்.

 

அதனை தொடர்ந்து நுழைவு தேர்விலும் பிரசன்னா பங்கேற்றான். இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் தேர்வில் பிரசன்னா பாஸ் செய்யவில்லை. இதனால் பெற்றோர் தன்னை ஏற்கமாட்டார்கள் என்று தவறான முடிவுக்கு வந்துள்ளார் பிரசன்னா.

 

 கடும் மன உளைச்சலில் இருந்து மாணவன் பிரசன்னா நேற்று மாலை தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பிரசன்னாவின் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளியின் மீது உள்ள மோகத்தாலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது என்று அக்கம் பக்கத்தினர் பேச ஆரம்பித்துள்ளனர். 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.