விஜய் +3 பேர் இடங்களில் கிடைத்தது ரூ.77 கோடி! ரெய்டு பற்றிய வருமானவரித் துறை அறிக்கை சொல்வதென்ன?!

சென்னை மற்றும் மதுரையில் நேற்று நடத்தப்பட்ட அதிரடித் தேடுதலில் கணக்கில்காட்டப்படாத 77 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய வருவாய்த் துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. 

இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ள பெரும் தேடுதல் நடவடிக்கைகளில்கூட, வருமான வரித் துறையின் சார்பில் சில நாள்களுக்குப் பிறகும்கூட அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை. வழக்கத்துக்கு மாறாக, விஜய் உள்பட நான்கு பேர் மீதான இந்த நடவடிக்கை குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

அதில், “ தமிழ்நாட்டில் திரைத்துறை சார்ந்த நான்கு பெரும்புள்ளிகளான ஒரு தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர், அவருடைய விநியோகஸ்தர் மற்றும் வட்டிக்காரர் ஆகியோர் தொடர்பாக, பிப். 5 அன்று வருமான வரித் துறை தேடுதலை மேற்கொண்டது. அண்மையில் வெளியாகி ஏறத்தாழ 300 கோடி ரூபாய் வசூலைத் தந்த ஒரு படம் தொடர்புடைய இவர்களின் 38 இடங்களில் மதுரையிலும் சென்னையிலும் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் முக்கியமான தகவல் என்பது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டதுதான். இந்தத் தொகை அந்த நிதியாளருக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும். ஏராளமான சொத்து ஆவணங்கள், உறுதிப்பத்திரங்கள், பின் தேதியிட்ட காசோலைகள் ஆகியவை மொத்தமாகக் கைப்பற்றப்பட்டன. இந்த வகையில் மறைக்கப்பட்ட மொத்த மதிப்பு 300 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.  

இதில் உள்ள விநியோகஸ்தர், ஒரு கட்டடக் கட்டுநராகவும் இருக்கிறார். அவரிடமுள்ள ஆவணங்கள் அனைத்தும் அவருடைய கமுக்க இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. அந்த இடம், அவருடைய நண்பருக்குச் சொந்தமானது. சாட்சியங்களின் சரிபார்ப்பு அவற்றை வெளிப்படுத்துவது நடந்துகொண்டிருக்கிறது.   

தயாரிப்பாளர், தயாரிப்பிலும் விநியோகத்திலும் பன்னடுக்கு திரையரங்குகளில் திரையிடலிலும் இருந்துவருகிறார். அவருடைய அலுவலகங்களில் கணக்குவழக்குகள் ஆயப்பட்டு வருகின்றன. உண்மையான இரசீதுகள், பதிவான செலவுகள், கலைஞர்களுக்கு அவர்கள் தந்த ஊதியம் தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.  

பிரபல நடிகர் தொடர்பான பிரச்னையைப் பொறுத்தவரை, அவருடைய அசையா சொத்துகள், அவருக்கு அந்த குறிப்பிட்ட தயாரிப்பாளரிடமிருந்து கிடைத்த ஊதியம் குறித்து தீர விசாரிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேடுதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.  

வருமான வரித் துறையின் ஆணையர் சுரபி அலுவாலியா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.