7 வயது சிறுவன் வாயில் இருந்த 526 பற்கள்! கண்டுபிடித்து அதிர்ந்த டாக்டர்கள்! பிறகு நிகழ்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: 7 வயது சிறுவனின் வாயில் இருந்து 526 பற்களை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுத்து சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.


சவீதா டென்டல் காலேஜ் மற்றும் ஹாஸ்பிடலில்தான் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக, அந்த சிறுவன் வாய் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். அவனது தாடைகள் இருபுறமும் கடுமையாக வீங்கியிருந்துள்ளன. இதன்பேரில் சிகிச்சைக்காக வந்த சிறுவனை பரிசோதித்த சவீதா டென்டல் காலேஜ் மருத்துவர்கள், அவனுக்கு காம்பவுண்ட் காம்போசிட் ஓடன்டோமோ என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். 

பற்களை உருவாக்கும் திசுப்பகுதியில் அந்த சிறுவனுக்கு மிகப்பெரிய சதைக்கட்டி இருப்பதை பார்த்து, அதனை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அப்படி செய்தபோது, அதற்கும்கீழே அதற்கும் கீழே என நிறைய சதைக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றை எல்லாம் அகற்றி வெளியே கொண்டு வந்து, கவனமாக ஆய்வு செய்தபோது, அந்த சதைக்கட்டிகளின் உள்ளே, சிறு சிறு அளவில் பற்கள் இருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை மொத்தமாக எண்ணிப் பார்த்தபோது, சுமார் 526 பற்கள் சிறிதும் பெரியதுமாக இருந்துள்ளதை கண்டு வியப்பின் எல்லைக்கே அவர்கள் சென்றனர். 5 மணிநேரம் போராடி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், 3 நாள் ஓய்வுக்குப் பின் சிறுவன் தற்போது நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பது போல, சிறுவனின் வாயில் இருந்து இவ்வளவு பற்கள் எப்படி உருவாகின என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.  

இது உலக மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சாதனை எனக் கருதப்படுகிறது.