கருப்பசாமி கோவில் பிடிக் காசுக்காக உயிரை விட்ட 7 பேர்! சாவிற்கு பிறகும் தொடர்ந்த துயரம்!

திருச்சி, துறையூர் அருகே கருப்புசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிர் இழந்துவிட, ஏகப்பட்ட பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள்.


மண்ணச்ச நல்லூரைச் சேர்ந்த தனபால் என்பவர், கருப்புசாமிகோயிலில் குறி சொல்லி வருகிறார். அவருக்கு ஏகமாய் கூட்டம் சேரவே, முத்தியம்பாளையம் கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி திறந்த வெளியில் வண்டித்துரை கருப்புசாமி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அமாவாசை, பெளர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தனபால் குறிசொல்வதால் கூட்டம் காணப்படும். ஆண்டுக்கு ஒருமுறை அதுவும் சித்ராபெளர்ணமி தினத்தன்று தனபால் குறி சொல்லி  பிடிக் காசு வழங்குவாராம்.

அதுபோலவே 16வது சித்ரா பவுர்ணமி தினத்தில் நடக்கவேண்டிய பிடிக் காசு வழங்கும் விழா,  தேர்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக பெரம்பலூர், சேலம், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை இரவே வாகனங்களில் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தனபால் குறிசொல்லி பிடிகாசு வழங்கத் தொடங்கினார்.

அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவே ஒருவர் கீழே விழுந்ததாகவும், அவர் மீது தடுப்புக்காக போடப்பட்ட சவுக்கு மரக் கட்டு விழுந்ததாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து விழுந்தனர். பின்னால் இருந்து சென்றவர்கள் கீழே விழுந்தவர்களை கவனிக்காமல் தடுப்புக் கட்டை மீது ஏறிச்சென்று பிடிக் காசு வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த களேபரத்தில் சிக்கிக்கொண்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே மிதிபட்டு இறந்துபோனார்கள்.

இத்தனை களேபரம் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்த பிறகும் கோயிலில் பிடிக் காசு வழங்கவதை பூசாரி தனபால் நிறுத்தவில்லை. அதன்பிறகு போலீஸார் வந்து விரட்டியபிறகே கிளம்பினார்.கோயில் நிர்வாகம் தரப்பில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று கூறிதான் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். ஆனால் குறைவான போலீஸார்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.