இயற்கை முறையில் ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்க ஏழு எளிமையான வழிகள்..!

சென்னை: விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் 7 வழிமுறைகள் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.


மலட்டுத்தன்மை இன்றைய உலகில், பலரும் சந்தித்து வரும் முக்கிய பிரச்னையாக உள்ளது. சராசரியாக,  ஆறில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களுக்கே மலட்டுத்தன்மை அதிகளவில் உள்ளது. இதற்கு, உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள் முக்கிய காரணமாகும். இதன்படி, விந்து எண்ணிக்கையை சரியான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலமாக அதிகரிக்க முடியும். விந்துவிற்கும், அதில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதன் எண்ணிக்கையை பொறுத்தே, உங்களது மனைவியை கர்ப்பம் தரிக்கச் செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  

1. உடற்பயிற்சி மற்றும் உறக்கம்.

சரியான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை குறைப்பதன் மூலமாக, விந்து எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். தினமும், சராசரியாக 50 நிமிடங்கள் என தொடர்ந்து 16 வாரங்களுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகள் செய்வதால், விந்துவில் அணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக, பல்வேறு ஆய்வுகளிலும் தெரியவந்துள்ளது. குண்டாக இருப்பவர்களை விட, உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களின் விந்துவில், அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

2. மன அழுத்தத்தை குறைப்போம்.

உடலின் சக்தி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையை மன அழுத்தம் பாதிக்கச் செய்கிறது. இதனால், இனப்பெருக்கத்தில் நாட்டம் குறைந்து, வேலை, பணம் சம்பாதிப்பதிலேயே கவனம் சென்றுவிடுகிறது. எனவே, மன அழுத்தம் மற்றும் கவலையை மறந்து, உங்களின் தினசரி வேலை எதுவும் இருந்தாலும், உடலுறவாக இருந்தாலும் உற்சாகமாகச் செயல்படுங்கள்.  

3. புகைப்பிடித்தல் வேண்டாம்.

புகைப்பிடிப்பதால் விந்தணு எண்ணிக்கை பாதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும்  ஆண்களிடையே அதிகளவில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு, சிகரெட் பிடிப்பது முக்கிய காரணமாக உள்ளது.  

4. மது அருந்துதல் மற்றும் போதைப் பழக்கம் கூடாது.

மது அருந்துதல் மற்றும் போதைப்பழக்கம் விந்து எண்ணிக்கையை நேரடியாக பாதிக்கச் செய்கிறது. அதிகளவில் மது அருந்துவதால் உடலில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பு குறைந்து விந்து எண்ணிக்கை பாதிப்பதோடு, விந்து உற்பத்தியும் குறைந்துவிடும். இதேபோல, கஞ்சா, கோகைன் போன்ற போதை மருந்துகள் நேரடியாக விந்து எண்ணிக்கையை பாதிக்கின்றன. மதுப் பழக்கம் மற்றும் போதை மருந்துகள், செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதோடு, நம்மை நிரந்தர மலட்டுத்தன்மை உள்ளவர்களாக மாற்றிவிடுகிறது என்றால் அது மிகையல்ல.  

5. சரியான மருந்து, மாத்திரைகள் தேவை.

வைட்டமின் டி, கால்சியம் நிறைந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது நலம். இதன்மூலமாக, விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுதொடர்பாக, டாக்டரிடம் ஆலோசனை பெற்று செயல்படுங்கள்.  

6. ஆன்ட்டி-ஆக்சிடென்ட் நிறைந்த உணவை சாப்பிடுங்கள்.

ஆன்ட்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவை அதிகளவில் சாப்பிடுங்கள். இதன்மூலமாக, உடலின் அடிப்படை மூலக்கூறான செல்களுக்கு தகுந்த ஊட்டம் கிடைக்கிறது. இது படிப்படியாக, உடலின் செயல்பாட்டை அதிகரிப்பதால், விந்து எண்ணிக்கையும் இயற்கையாகவே அதிகரிக்கிறது.  

7. அஸ்வகந்தா சாப்பிடுங்கள்.

இந்திய பாரம்பரிய மருத்துவப் பொருளான அஸ்வகந்தாவை மறந்துவிடாதீர்கள். செக்ஸ் தொடர்பான அனைத்து குறைபாடுகளையும் நீக்கி, உங்களுக்கு முழு ஊட்டம் அளிக்கக்கூடிய திறன் அஸ்வகந்தாவிற்கு மட்டுமே உள்ளது. தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு அஸ்வகந்தாவை நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக, விந்து எண்ணிக்கையை எளிதில் அதிகரிக்கச் செய்யலாம்.