ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக கூறி வைகோ காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநரின் அடாவடித்தனம்! புட்டு புட்டு வைக்கும் வைகோ!

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று மூவர் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோதே அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார். மேலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் அமர்வு,ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6 இல் தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரையை செயல்படுத்தாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று (09.05.2019) தள்ளுபடி செய்துவிட்டது. இதுபற்றிய பிரச்சனை தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தனது அடாவடித்தனத்தை தொடரக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.