70அடி கிணற்றில் விழுந்த 68 வயது மூதாட்டி! திருச்சியில் நடந்த திக்திக் மீட்புப்பணி

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில்  செந்தண்ணீர்ப்புரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவியின் பெயர் சாந்தா.

சாந்தாவின் வயது 68. பிறரின் வீட்டில் சுமார் 70 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றுள்ளது. நேற்று காலை சாந்தா கிணற்றின் அருகில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். துவைத்த பிறகு அவற்றை காய வைப்பதற்காக கிணற்றின் மீது போடப்பட்டிருந்த பலகையின் மேல் அமர்ந்தார். 

அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பலகை உடைந்தது. பலகை உடைந்ததில் சாந்தா கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். தண்ணீரில் குதிக்கும் சத்தத்தை கேட்ட சாந்தாவின் உறவினர்கள் விரைந்து வந்து கிணற்றை பார்த்தனர். அப்போது இடுப்பளவு வரை தண்ணீர் சூழப்பட்டு சாந்தா கிணற்றில் நின்று கொண்டிருந்தார். உடனே சாந்தாவின் உறவினர்கள் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு உதவியோடு சாந்தாவை இழுத்து மேலே கொண்டு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினார்.

இந்த சம்பவமானது திருச்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.