பள்ளிப் பேருந்தில் வைத்து பூட்டப்பட்ட 6வயது சிறுவன்! மூச்சுத்திணறி பலியான விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

6 வயது இந்திய சிறுவன் பள்ளி வாகனத்திலேயே பல மணி நேரங்கள் உறங்கியதால் இறந்து போன சம்பவம் துபாய் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


துபாய் நாட்டில் இஸ்லாமிக் சென்டர் என்னும் புகழ்பெற்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியானது அல் குயோஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு நாட்டிலும் உள்ள இஸ்லாமிய குழந்தைகள் இங்கு கல்வி கற்பது வழக்கம். இதேபோன்று, நம் நாட்டின் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது ஃபர்ஹான் பைசல் என்ற 6 வயது குழந்தை இப்பள்ளியில் பயின்று வருகிறது. 

இந்த குழந்தையானது நேற்று காலை தன் வீட்டில் இருந்து பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளது. காலை 8 மணிக்கு பள்ளி வாகனத்தை விட்டு இறங்க வேண்டிய குழந்தை, தூங்கியதால் பள்ளி வாகனத்தை விட்டு செல்லவில்லை. வாகன ஓட்டுநரும் இதைப்பற்றி கவனிக்காது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

மதியம் வாகனத்தை திறந்த போது தான் குழந்தை உள்ளே சிக்கி கிடப்பதை ஓட்டுநர் கவனித்துள்ளார். உடனே குழந்தையை பள்ளி வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது துபாய் காவல்துறையினருக்கு மதியம் 3 மணிக்கு ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. "காலீத் டைம்ஸ்" என்ற புகழ்பெற்ற பத்திரிகையில் இந்த சம்பவமானது வெளிவந்துள்ளது. அந்த பத்திரிக்கையில், உயிர் இழந்த சிறுவன் அவர்கள் வீட்டில் இளையவன் என்றும், அவரின் தந்தையான பைசல் துபாயில் நீண்ட காலம் வசித்து வருபவர் என்றும், அவர் பல்வேறு தொழில்களை துபாயில் செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, குழந்தையின் உடலானது நேற்று மாலை 6 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து விதமான விதிமுறைகளையும் பூர்த்தி செய்து பின்னர் குழந்தையின் உடல் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

6 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது, துபாய் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.