விவசாயி வீட்டுக்கு அடியில் ரகசிய சுரங்கம்..! திறந்து பார்த்த போலீஸ்! அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்!

பிரிட்டனில் பூமிக்கு அடியில் அறைகளை உருவாக்கி 3 கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் பெட்ரோக்ஸ்டவ் பகுதியை சேர்ந்த டேனியல் பால்மர் என்பவர் தனது தந்தையின் நிலத்தில் பூமிக்கு அடியில் விவசாய பொருட்கள் வைத்து இருக்கும் கிடங்கு போல் ஒரு கட்டிடம் கட்டியுள்ளார். பின்னர் அதனுள் ஒரு பாதாள அறை அமைத்து அதனுள்ளே சிமெண்ட்டிலான அறைகள் ஏற்படுத்தி உள்ளார்.

பின்னர் அங்கு தண்ணீர், மின்சார விளக்குகள் என அதிநவீன வசதிகளை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக கஞ்சா செடிகளை ரகசியமாக வளர்த்து வந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில் சுமார் 3,84,000 பவுண்டுகள் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். (அதாவது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் ரூ.3.35 கோடி).  

முதலில் டேனியல் பால்மரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா செடி வளர்ப்பு பற்றி தனக்கு தெரியாது என்றும் தந்தையின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர்தான் வளர்த்து இருக்கலாம் என்றும் மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் டேனியல் பால்மர்தான் கஞ்சா செடிகள் வளர்த்ததற்கான ஆதாரத்தை போலீசார் கண்டுபிடித்த உடன் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டேனியல் பால்மருக்கு 6 வருடம், 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய டேனியல் பால்மருடன் சேர்ந்து கஞ்சா செடி விவசாயம் பார்த்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.