ஒரே குடும்பம்! அடுத்தடுத்து இறந்த 6 பேர்! நீடிக்கும் மர்மம்! உடல்களை தோண்டி எடுக்கும் போலீஸ்! திக் திக் சம்பவம்!

திருவனந்தபுரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 12 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கேரள போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.


கோழிக்கோடு மாவட்டம், கூடாத்தி கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாம் ஜோஸ். இவர்,  கடந்த 2008ம் ஆண்டில் திடீரென உயிரிழந்தார். இதற்கு முன்பாக, 2002ம் ஆண்டில் இவரது மனைவி அன்னம்மா உயிரிழந்தார். 2012ம் ஆண்டில் ஜோஸின் மகன் ராய் தாமஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். தாமஸின் 10 மாத கைக்குழந்தை மகள் அடுத்த சில மாதங்களில் உயிரிழந்தாள். இதுதவிர, ஜோஸின் மைத்துனர் மேத்யூ மஞ்சாடியும் 2010ம் ஆண்டில் உயிரிழந்தார்.  

இப்படி குறுகிய காலத்தில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விசயம், ஜோஸின் மற்றொரு மகன் ரோஜோவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் அவர், இதுதொடர்பாக, வடகரை போலீசாருக்கு புகார் செய்தார். உறவினர்கள் சிலர், தங்களது சொத்தை அபகரிக்க முயற்சித்து வருவதால், அவர்கள் ஒருவேளை தங்களது குடும்பத்தினரை கொன்றிருக்கலாம் என ரோஜோ தனது புகாரில் கூறியுள்ளார்.  

இதையடுத்து, கேரள கிரைம் பிராஞ்ச் போலீசார், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து, விசாரிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். விரைவில் முழு உண்மை தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.