முருகனுக்கு ஆறு முகங்கள் ஏன்? அந்த ஆறு முகமும் உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா?

தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.


இதனை முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.  இப்படி பல சிறப்புகளைக் கொண்ட முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது. அந்த ஆறுமுகங்கள் என்ன என்று இங்கு பார்ப்போம். 

சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார். முதல் ஐந்து முகங்கள் பஞ்ச  பூதங்களைக் குறிக்கின்றன. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன். ஆகையால், அம்மையின் ஒரு முகமும் அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்று ஒரு  விளக்கம் உள்ளது. 

ஒரு முகம், பூங்கொடி போன்ற இடையைக் கொண்டு குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தரும் முகம். 

குற்றம் இல்லாமல் திகழ்வதற்காகப் பல கதிர்களை விரித்து வெளிச்சம் தரும் முகம்தான் இரண்டாவது முகம். 

முருகனைச் சுற்றி நின்றபடி அவரை புகழ்ந்து பாடுபவர்களைப் பார்த்து இனிமையாக சிரித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் தரும் முகம்தான் இந்த மூன்றாவது முகம். 

அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் நான்காவது முகம். 

முருகனின் முகத்தை நாம் சூரியனாகவோ அல்லது சந்திரனாகவோ காணப்படும் முகம்தான் ஐந்தாவது முகம். 

உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்து கொண்டிருக்கும்போது, நடுவே சில தீய சக்திகளும் திகழும். அப்போது தீய சக்திகளோடு போர் செய்து வெல்லும், அது மட்டுமல்லாமல் நமக்கு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் முகம்தான் ஆறாவது முகம். 

இதைத்தான் ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று,  குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப்  பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது. 

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன? 

ஒரு முகம் - மஹhவிஷ்ணுவுக்கு, 

இரு முகம் - அக்னிக்கு, 

மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு, 

நான்முகம் - பிரம்மனுக்கு, 

ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு, 

ஆறு முகம் - கந்தனுக்கு. 

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் : 

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், 

2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம், 

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம், 

4. உபதேசம் புரிய ஒரு முகம், 

5. தீயோரை அழிக்க ஒரு முகம், 

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.