பிறந்த உடன் மூச்சுத் திணறிய 6 குழந்தைகள்! பதறிய பெற்றோர்! டாக்டர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

குழந்தைகள் நல மருத்துவமனையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிறந்து சில வாரங்களேயான 6 குழந்தைகள் மூச்சு விட முடியாததால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்று பகுதியில் இருக்க வேண்டிய குடல் சற்று மேல் நோக்கி நகர்ந்து இருதயத்திற்கு அருகில் சென்றிருந்ததை கண்டு அதிர்ந்தனர். இதயத்தை அழுத்திக்கொண்டு குடல் இருந்ததால் குழந்தைகளால் வழக்கம்போல மூச்சுவிட இயலவில்லை. 6 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை கண்டு மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அனைத்து குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளும் தற்பொழுது இயல்பான முறையில் சுவாசித்து வருகின்றனர்.

இது குறித்து ஒரு குழந்தையின் தந்தை கூறுகையில், "குழந்தையின் சுவாசத்தில் பிரச்சனை இருப்பதை அறிந்தவுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியதால் இங்கு அழைத்து வந்தேன். மருத்துவர்கள் அனைவரும் செம்மையாக செயல்பட்டு என்னுடைய குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.

என் குழந்தைக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். இந்த சம்பவமானது பிற மருத்துவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.