பொதுத்தேர்வு ரத்து - வெற்றிக்கு காரணம் நாங்கதான் என்கிறார் இராமதாஸ், எல்லா கட்சிக்காரங்களும்தாங்க - இது சிபிஎம் பாலகிருஷ்ணன் !

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டட்த்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்திருப்பதற்கு பரவலாக மகிழ்ச்சியும் வரவேற்பும் வெளிப்பட்டுள்ளது.


இது குறித்து இன்னும் காரசாரமான கருத்துகளும் நின்றபாடில்லை. இந்நிலையில் “நாங்கள் வலியுறுத்தினோம்; அரசாங்கம் பொதுத்தேர்வை ரத்துசெய்துவிட்டது” என்கிறபடி சில தரப்பினர் பெருமிதத்தோடு கூறிக்கொள்கின்றனர். அரசியல் கட்சிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?   

பா.ம.க. நிறுவனர் இராமதாசு  

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். அதுமட்டுமின்றி, இந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பபா.ம.க. சார்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தேன். அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கடந்த 27-ஆம் தேதி காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  

தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுபற்றி அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதையேற்று பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், அதை ஏற்க மறுத்துவிட்ட நான், பொதுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்துசெய்ய வலியுறுத்தினேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இத்தகைய சூழலில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் கைவிடப் படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும். 

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மாணவர்களுக்காக இதை செய்திருப்பதில் பா.ம.க. பெருமிதம் கொள்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன? திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எத்தனை முறை பேசினார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று இராமதாசு கூறியுள்ளார்.  

மார்க்சிய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பில் உள்ள சில ஷரத்துக்களை முன்னிறுத்தி 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இத்தகைய பொதுத்தேர்வு உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்கும், மாணவர்களின் இடைநிற்றலுக்கு இத்தகைய அறிவிப்பே காரணமாகிவிடும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும், 2009ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்திற்கு புறம்பானது என்பதாலும் இந்த அறிவிப்பை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. இதுபோல் மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுத்தேர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  

இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை ரத்து செய்வது என தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. 

இந்த அறிவிப்பு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ஏற்பட்ட மன அழுத்த உணர்வையும், அச்ச உணர்வையும் அகற்ற உதவிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும், கல்வியாளர்கள் மத்தியிலும் பதற்ற நிலைமையை உருவாக்கக் கூடாது. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் நிலைபாடை முற்றாக கைவிடவேண்டும். இதற்காகக் குரலெழுப்பிய, போராடிய அனைத்து அமைப்புகளுக்கும், மாணவர் அமைப்புகளுக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.” என்று கே.பாலகிருஷ்ணன் இன்றைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.