மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் சபீனா காதுன் என்ற 57 வயதுப் பெண்மணி உயிரிழந்துள்ள சம்பவம், போராட்டக்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கத்தா போராட்டத்தில் 57 வயதுப் பெண் திடீர் மரணம்!
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தலைநகர் டெல்லியில் உள்ள சாகித் பக் பகுதியில் பெண்கள் நடத்திவரும் போராட்டம் 50 நாள்களை நெருங்குகிறது. மற்ற மாநிலங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் பகுதியில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இதில் சபீனா காதுன் எனும் பெண்மணி இதில் கடும் குளிரிலும் தினமும் போராட்டத்தில் பங்கெடுத்துவந்தார்.
வழக்கம்போல, நேற்று சனிக்கிழமை இரவும் அவர் போராட்டத் திடலில் அமர்ந்திருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலம் குன்றியது. அங்கிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள இஸ்லாமியா மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். ஆனால், அவருக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது.
இது குறித்த தகவல் அறியாமல் திடலில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் பதற்றம் அடைந்தனர். சபீனாவின் இறப்புச்செய்தி அறிந்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மற்ற ஊர்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரிடையே இந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.