ஒரே நாளில் ரூ.55 ஆயிரம் கோடி ஸ்வாகா! சரியும் இன்ஃபோசிஸ் சாம்ராஜ்யம்! 2 லட்சம் ஊழியர்களின் கதி? அதிர்ச்சி பின்னணி!

அமெரிக்காவில் விசிலூதுபவர்கள் பாதுகாப்பு சட்டம் என ஒன்று உள்ளது. இந்தியாவிலும் அப்படி ஒரு சட்டம் உண்டு.


கார்ப்பரேட் நிறுவனங்களில் விசிலூதுபவர்கள் கொள்கை என உண்டு. விளையாட்டில் விதி மீறல் நடந்தவுடனே நடுவர் விசிலை ஊதுவதைப் போல, அரசு திட்டங்களில் விதிமீறல்கள் நடைபெற்று விட்டால்,அதுபற்றி அறிந்த ஊழியர்கள் எச்சரிப்பதைத்தான் விசில் ஊதுதல் என்று உருவகமாகக் குறிப்பிடுகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களிலும் விசிலூதுபவர்கள் கொள்கை என ஒன்று உண்டு. விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றால் அதைப் பற்றி அறிந்தவர்கள், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே அநாமதேயமாக அதை உரிய இடத்தில் போட்டுக்கொடுக்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை.

இப்போது விசிலூதலில் வசமாகச் சிக்கிக் கொண்டிருப்பது அரசாங்கமோ ஆட்சியாளர்களோ அல்ல, ஒரு பிரபல கார்ப்பரேட் நிறுவனமான இன்ஃபோசிஸ். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் இரண்டும்தான் தகவல் தொழில்நுட்ப சேவையில் முன்னணியில் இருக்கும் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள்.

இரண்டு நிறுவனங்களுக்குமே இப்போது போதாத காலம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வர்த்தகத்தில் பல்வேறு வகையில் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. ஆட்குறைப்பு என்பதும், அடிமாட்டு ஒப்பந்தத்திற்கு ஊழியர்கள் அமர்த்துவது என்ற குற்றச்சாட்டுகளும் கூட உள்ளன.

இந்த நிலையில், இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர், நெறிசார்ந்த ஊழியர்கள் என்ற பெயரில் அநாமதேயமாக, நிறுவனத்தின் சிஇஓ சலில் பரேக்கையும், சிஎஃப்ஓ(தலைமை நிதி அதிகாரி) நிலஞ்சன் ராயையும் அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திடம் போட்டுக்கொடுத்துள்ளனர். கூடவே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆளுமை செய்யும் இயக்குநர் குழுவிற்கும் போட்டுக் கொடுத்துள்ளனர்.

லாபத்தை ஊதிப் பெருக்கிக் காட்டுவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் கணக்குப் பதிவுகளில் தில்லுமுல்லு செய்கின்றனர், அதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது, இதை தீரவிசாரிக்க வேண்டும் என்பதுதான், அந்த அநாமதேய ஊழியர்களின் புகார். 

அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் இதை நோண்டத் தொடங்கிவிட்டது. அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்கிற வகையில், இன்ஃபோசிஸ் கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்திருந்தால் பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிரு்ககும். விசிலை ஊதியவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு அதில் கமிஷன் தொகை சன்மானமாக வழங்கப்படும்.

வசமாக சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில், இன்ஃபோசிஸ் விசிலூதல் கொள்கைப்படி, சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி அறிவித்துள்ளார்.

ஆனால் உடனடி பாதிப்பை இன்ஃபோசிஸ் தவிர்க்க முடியவில்லை. அந்நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன. நிறுவனத்திற்கும் கெட்ட பெயர். அது வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு சிஇஓ மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்பதற்காக விசிலூதுபவர்கள் சில பிட்டுகளையும் சேர்த்துப் போட்டுள்ளனர். சுயேச்சை இயக்குநர்களாக உள்ள இருவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை மற்றவர்களிடம் குறிப்பிடும்போது மதராஸிகள் என இழிவுபடுத்துவது சிஇஓ சலில் பரேக்கிற்கு வாடிக்கை என்பதையும்,

அதற்கும் ஆதாரம் இருப்பதாகவும் புகாரில் விசிலூதுபவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல மற்றொரு பெண் இயக்குநரை குறிப்பிடும்போதும் சிறுமைப்படுத்தி பேசுவது வழக்கம் என அவர்கள் புகார் கூறியுள்ளனர். 

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு அந்நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய நெருக்கடி இது. நம்பகத்தன்மையை மீட்டெடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பி இன்ஃபோசிஸ் மீண்டு வருமா என்பதுதான் ஐடி ஊழியர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்.