ம்ருந்தீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம். இன்றைய தரிசன மகிமைகள்!

கிழக்கு கடற்கரை சாலையில்(ECR), பேருந்தில் சென்னை செல்வோர்கள் எல்லாம் அதிகாலையில் திருவான்மியூர், திருவான்மியூர், திருவான்மியூர் என்ற நடத்துனரின் அறிவிப்பு கேட்டு உறக்கம் களைந்து எழுவோம்


இப்படி உடலுறக்கத்தை களைப்பது மட்டுமல்ல உயிரின் உறக்கத்தையும் களைத்து, அறிவுத்தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையது திருவான்மியூர் என்னும் சைவத் திருத்தலம். சென்னை மாநகரத்தின் சாலைகள் முடிந்து கிழக்கு கடற்கரை சாலை தொடங்கும் இடத்தில் இருக்கும் இந்த சிவத்தலத்தின் பெயரை ஒருமுறையேனும் உச்சரிக்காமல், ஒருமுறையேனும் கடந்து போகாதவர்கள் தமிழகத்தில் இருப்பது குறைவுதான், ஆனால் ஒருநாளாவது இதற்கு ஏன் "திருவான்மியூர்" என்று பெயர் வந்தது, இத்தலத்தில் "மருந்தீஸ்வரர்" என்ற பெயரில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் மகிமை என்ன!? என்பதனை சென்னை வாசிகள் கூட யோசித்து அறிந்து கொள்வதில்லை.

இப்படிப்பட்ட சிவாலயத்திற்கு இன்று (05/02/2020) ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் காலை 07 மணிமுதல் 09 மணிக்குள் நடைபெற இருப்பதால் இத்தலத்தின் மகிமைகள் சிலவற்றை காண்போம்!!

வான்மீகி முனிவர் சிவபெருமானை வழிபட்ட காரணம் பற்றியே இவ்வூரின் பெயர், வான்மியூர் எனப்பெற்று திருவான்மியூர் எனப்படுகின்றது. இத்தலத்து இறைவர் பௌர்ணமி தோறும் இந்த வான்மீக முனிவருக்கு திருநடன காட்சி அளிப்பது சிறப்பான ஒன்றாகும், திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈசியார் செல்லும் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிக்கொள்ளும் இடத்தில் சாலை நடுவில் இருக்கும் மண்டபமே வான்மீகி முனிவருக்கான தனி ஆலயம் ஆகும், அது ஆலயத்தின் வடக்கு பிரகாரமும் மேற்கு பிரகாரமும் சந்திக்கும் மூலை ஆகும்

ஆலயத்தில் எழந்தருளி அருள் பாலிக்கும் இறைவர், அகத்திய முனிவருக்கு வயிற்று வலியை நீக்கி மருந்துகள் பற்றி குறிப்புகள் கொடுத்தமையால் மருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப் படுகிறார், திருவான்மியூர் பக்தர்கள் யாவரும் வான்மியூர் மருந்து!! என்றே இத்தல இறைவனை கொஞ்சியழைப்பது உண்டு!! காமதேனு என்ற தெய்வலோகப் பசு பால்சொரிந்து வழிபட்டமையால் கோகரந்தீஸ்வரர், பால்வண்ண நாதர் என்ற பெயரும் உண்டு. சுயம்புவாக தோன்றியிருந்த இறைவரது சிவலிங்க திருமேனியில் காமதேனுப் பசுவின் குளம்படிச் சுவட்டால் தழும்பு ஏற்பட்டு இருப்பதனை வான்மியூர் இறைவருக்கு பாலபிஷேகம் நடைபெறுகையில் கண்டு இன்புறலாம்.

இத்தலத்திற்கு ஐந்து தீர்த்தங்கள் உண்டு. இவைகள் தம்மில் நீராடுபவர்களுக்கு முறையே ஞானத்தை வழங்குவதால் ஞானதாயினி என்றும் மோக்ஷத்தை வழங்குவதால் மோக்ஷதாயினி என்றும் பிறவா வரமளிப்பதால் ஜென்மநாசினி என்றும் செய்த பாவங்களை அழிப்பதால் பாவநாசினி என்றும் மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றுவதால் காமநாசினி என்றும் அழைக்கப் பெறுபவைகளாம். தேவாரம் பாடிய திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கிலும் அப்பர் சுவாமிகள் திருவாக்கிலும் இடம்பெற்றுள்ள திருப்பதி திருவான்மியூர் ஆகும். இன்றைக்கு கான்கிரீட் கட்டிடங்கள் சூழ மாநரமாய் காட்சி தரும் இவ்வூர் தேவாரப் பாடப்பெற்ற ஆறாம் ஏழாழம் நூற்றாண்டுகளில் ஒருபக்கம் கடல் அலைகள் சூழ ஒருபக்கத்தில் வயல்வெளிகள் சூழ மருதத்திணையும் நெய்தல் திணையும் மயங்கும் பகுதியாக இருந்திருக்கிறது என்பதனை தேவாரப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

மனதில் ஆயிரம் கஷ்டம், எத்தனையோ மனக்கவலை, குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் என்று எத்தனையோ சஞ்சலங்கள் இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில் இத்தலத்தில் திருஞானசம்பந்தப் பாடியபடி திரையார் தென்கடல் சூழ் திருவான்மியூர் உறையும் அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே!! என்று பாடி ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் இறைவன் உங்கள் கஷ்டங்கள் அத்தனையையும் தூள் தூளாக பறக்கவிடுவார். வாழ்வில் எத்தகு துன்பமோ கஷ்டமோ வந்திருந்தாலும் பரவாயில்லை ஒருமுறை இந்த திருவான்மியூர் தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி வலம் வந்து வழிபடுங்கள் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே என்று எடுத்து காட்டுகிறார் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள் ஆதலால்தான், இத்தலத்தினை சூரியன், சந்திரன், பிரம்மதேவன், காகுத்தன், இரட்சசு என்னும் மன்னவர்கள், எமன், யமுனை நதி, அகத்தியர், காமதேனு, நான்கு வேதங்கள், பிருங்கி முனிவர் முதலியவர்கள் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளனர் எனில் மனிதர்களாகிய நாம் வழிபட்டே ஆகவேண்டியது அவசியம் ஆகும்!!

திருவாரூரில் எழுந்தருளி இருப்பது போலவே இத்தலத்திலும் தியாகராசப் பெருமானாக இறைவன் உற்சவ கோலத்தில் எழுந்தருளி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆடும் தியாகர் என்பர். பௌர்ணமியிலும், பெருந்திருவிழா காலங்களிலும் இவர் ஆடிவரும் அழகு காட்சி கண்நிறைந்த ஒன்றாம். நவகிரகங்களுக்கு தனிச்சன்னதி இன்மையால் இது நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்க வல்ல கோளிலி தலமாகும். இத்தலத்தில் அம்பிகை திரிபுர சுந்தரி, சொக்கநாயகி என்றெல்லாம் அழைக்கப் பெற்று திருவருளை வாரி வாரி வழங்குகின்றாள்.

வாழ்வில் காலநேரம் இன்றி ஓடிக் கொண்டு இருக்கும் மனிதர்கள் சென்னையில் மிக அதிகம், அவர்களுக்கு எல்லாம் மன நிம்மதியையும், உடல் வலிவையும், வாழ்வில் அமைதியையும், தேடாத செல்வத்தையும் வழங்க வல்ல திருவான்மியூர் இறைவர் அருளை வாரி வாரி வழங்க காத்திருக்கிறார். அவர் மனக்கவலை தீர்க்கவல்ல மருந்தீசர்.

ஆதலால் இன்று ஒருநாள் மட்டுமாவது நேரம் ஒதுக்கி ஒரு ஓரத்திலாவது நின்று இன்று - காலை 7-9 மணிக்குள் நடைபெறும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கும்பாபிசேகத்தினை கண்டு இன்புறுவோம் ஆகுக!!