சாலையில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட பிச்சைக்காரரின் ஆங்கிலப் புலமை..! விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம்!

பிச்சைக்காரர் ஒருவரின் ஆங்கில புலமையைக் கண்ட காவல்துறையினர் வியந்திருப்பது ஒடிசாவில் வைரலாகி வருகிறது.


ஒடிசா மாநிலத்தில் ஜெகன்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வாசலில் கிரிஜா சங்கர் மிஷ்ரா என்றால் 51 வயது முதியவர் பிச்சை எடுத்து வருகிறார். நேற்று ஜெகன்நாத் கோவில் வாசலில் இவருக்கும், ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு அடித்து கொண்டுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருவரையும் தனித்தனியே புகார் மனு எழுதித்தருமாறு கூறியுள்ளனர். அப்போது சங்கர் மிஸ்ரா ஆங்கிலத்தில் சரளமாக புகார் மனு எழுதுவதை கண்ட காவல்துறையினர் ஆச்சரியமடைந்து அவரிடம் விசாரித்தனர். 

அப்போது அவர் கூறுகையில், "என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. நான் ஒரு பொறியியல் பட்டதாரி. நல்ல சம்பளத்தில் மதிப்புமிக்க ஒரு வேலையில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய மூத்த அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் வேலையை துறந்தேன். என்னால் அந்த சம்பவங்கள் குறித்து விவரிக்க இயலாது" என்று சங்கர் மிஸ்ரா காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

சங்கர் மிஷ்ரா சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். இந்த செய்தியானது ஒடிசா மாநிலத்தில் வைரலாகி வருகிறது.