திடீர் காய்ச்சல்..! அடுத்தடுத்து 3 ஹாஸ்பிடல்..! ஆனாலும் 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த பரிதாப சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


வேலூர் மாவட்டம் புல்லானேரி பாட்டன் வட்டம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்தர், பவித்ரா தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். 5 வயதான மூத்த மகள் அனுஷா திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். அனுஷாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

சிறுமி குணமானதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் வீடு திரும்பினார் அனுஷா. ஆனால் அனுஷாவுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகம் ஆனது. பின்னர் மீண்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுஷாவை அழைத்து சென்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

சாதாரண காய்ச்சல் என சென்ற சிறுமிக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு, வைரஸ், மற்றும் மர்மக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், வீட்டில் பாத்திரங்களில் உள்ள நீரை மூடி வைக்குமாறும், வீட்டின் பின்புறங்களில் தேவையற்ற குப்பை, தேங்காய்மட்டை, டயர்கள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சுகதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.