2 பேருக்கு உயிர் கொடுத்துவிட்டு உலகை விட்டுச் சென்றாள் எமிலி! நெகிழ வைத்த 5 மாத குழந்தையின் வாழ்க்கை! இதயத்தை கனக்க வைத்த நிகழ்வு!

கலிஃபோர்னியா: பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தையின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்துள்ளனர்.


ஆம். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபிரெஸ்னோ எனும் பகுதியில்தான்  இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த மைக்கேல் ஆப்ராம்ஸ், ஜேடன் ரோஸ் தம்பதியினருக்கு, 5 மாதம் முன்பாக, எமிலி என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்ப்பது பற்றி பலவித கனவுகளுடன் காத்திருந்த ஆப்ராம்ஸ் தம்பதியினருக்கு சில நாட்கள் முன்பாக, தலையில் பேரிடி விழுந்தது.

ஆம், குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வேண்டுமெனில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கி, பல தரப்பு மக்களிடமும் ஆப்ராம்ஸ் தம்பதியினர் நிதி உதவி கோரினர்.

அனைவரும் உதவிய நிலையில், சிகிச்சை செய்தும் பலனின்றி, எமிலி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவிக்கவே, ஆப்ராம்ஸ் தம்பதியினர் நொறுங்கிப் போயினர். இருந்தாலும், தங்களது மகளின் இதயம் மற்றும் சிறுநீரகத்தை, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 2 நோயாளிகளுக்கு தானமாக வழங்குவதாக, ஆப்ராம்ஸ் தெரிவித்தார்.

இதற்கான சிகிச்சை நடைபெற்றபோது, 5 மாத குழந்தை எமிலிக்காக, மருத்துவமனை ஊழியர்கள், உள்ளூர் மக்கள், ஆப்ராம்ஸ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் என அனைவரும் திரண்டு வந்து, மருத்துவமனை முழுக்க மவுனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி கண்களில் நீர் வரச் செய்வதாக இருந்தது...