தனுஷ்னு சொன்னாங்க உடனே ஓகே சொல்லிட்டேன்..! 41 வயது மஞ்சு வாரியர் வெளியிட்ட அசுரன் சீக்ரெட்!

சென்னை: ''அசுரன் கதையில் நடிப்பதற்கு தயங்காமல் உடனே ஓகே சொன்னேன்,'' என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.


சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள படம் அசுரன். பல தரப்பிலும்  பாராட்டுகளை குவித்துள்ள இந்த படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷின் மனைவி வேடத்தில் சிறப்பாக நடித்தவர் மஞ்சு வாரியர்.

இவர், மலையாளத்தில் பிரபல நடிகை ஆவார். இளம் வயதிலேயே நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டு, நடிப்பை விட்டு ஒதுங்கினார். திலீப்பை விவாகரத்து செய்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின், 36 வயது என்ற படத்தின் மூலமாக, மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.  

இந்நிலையில், தமிழில் முதல்முறையாக 'அசுரன்' படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அசுரன் படத்தில் நடிக்க நேர்ந்த அனுபவம் பற்றி நடிகை மஞ்சு வாரியர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ''ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உள்ளது. சரியான நேரம் அமைந்தால் எதுவுமே நன்றாக நடக்கும்.

எனக்குப் பலமுறை தமிழ் சினிமா வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும், அவற்றில் நடிக்க முடியவில்லை. ஆனால், எதிர்பாராவிதமாக, தனுஷ் மூலமாக அசுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதையை கேட்டதும் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழக கிராமப் பெண்கள் அணியும் உடை, பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றை ஹோம் ஒர்க் செய்து பார்த்தேன். எனது பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், அசுரன் படத்தில் நடிப்பதற்காக தமிழ் மொழி பயிற்சியும் பெற்றேன். முதல்முறையாக நடிப்பது போன்ற அனுபவம்தான் எனக்கு ஏற்பட்டது.

அந்த படபடப்பிலேயே படத்தில் நடித்து முடித்தேன். எனக்கு தேவையான வெற்றிமாறன், தனுஷ் ஆலோசனை கொடுத்து உதவினர். இதுபோன்ற கதைகளில் நான் மலையாளத்தில் நடித்ததில்லை. எனது சினிமா அனுபவத்தில் இது மறக்க முடியாத படமாகும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.