தமிழக அரசு மீது 4000 கோடி விதிமீறல் குற்றச்சாட்டு! அறப்போர் அக்கப்போர்!

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களுக்கான ரூ 4000 கோடி ஒப்பந்தங்கள் நாளை முடிவடைய உள்ளன. இது விதிமுறை மீறல் என்று அறப்போர் இயக்கம் குரல் கொடுக்கிறது.


இந்த டெண்டர்கள் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் மாநகராட்சி விதிகளில் பல மீறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்பிற்குறிய ஒப்பந்தங்கள் இவ்வளவு விதிமீறல்களுடன் 8 வருடத்திற்கு ஒப்பந்தம் ஆக உள்ளது.  எனவே இந்த டெண்டர்களை உடனே ரத்து செய்யவும், தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

இங்கு உதாரணத்திற்கு மண்டலங்கள் 1,2,3 மற்றும் 7 டெண்டர்களின் விதிமீறல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்கலான 9,10,13 டெண்டர்களிலும் மண்டலம் 11,12,14,15 டெண்டர்களிலும் இதே விதிமீறல்களால் தன உள்ளது.

1) சுமார் 95% குப்பைகள் குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்பப்படும் என்பது 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு எதிரானது. விதிகளின்படி குறைந்த பட்ச குப்பைகளை மட்டுமே குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும். கீழ்க்கண்ட அட்டவணையில் இந்த குறைந்த பட்ச உத்தரவாதமானது எவ்வாறு 8 வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

2) மொத்தமாக அள்ளப்படும் குப்பையில், 89.6% அளவு மக்கும் குப்பை கொடுங்கையூருக்கு கொண்டு செல்லப்படும் என்பது மிகப்பெரிய விதிமீறல்களுள் ஒன்று. திடக்கழிவு மேலாண்மை விதிகளில் கூறப்பட்டுள்ளதென்னவென்றால், மக்கும் குப்பையானது ஒன்று உரமாக்கப்பட வேண்டும் அல்லது அருகாமையிலேயே பயோகேசாக மாற்றப்பட வேண்டும்.

ஆனால் டென்டரில் மதிப்பிடப்பட்டுள்ள 396.15 டன் மக்கும் குப்பையில், வெறும 38.2 டன் குப்பை மட்டுமே உரமாக்க/எருவாக்கப்பட அருகாமை இடங்களுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டிருக்கிறது.. இது திடக்கழிவு மேலாண்மையின் நோக்கத்தையே தோற்கடிப்பதாகும்.

3) டென்டரில் கூறப்பட்டிருப்பது என்னவெனில், மக்காத குப்பையில் 0.4% மட்டுமே ஆங்காங்கே அருகாமையில் மறுசுழற்சிக்கான மையங்களில் பிரிக்கப்படும் மீதி 99.6% கொடுங்கையூருக்கு நேராக அனுப்பப்படும். அதாவது ஒரு பகுதிக்கு சுமார், 1 டன் மட்டுமே அருகாமை குப்பை பிரிப்பு மையங்களில் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதமுள்ள 226.33 டன் குப்பை கொடுங்கையூருக்குக் கொண்டு செல்லப்படும் எனில் இது திடக்கழிவு மேலாண்மை விதிக்கு முற்றிலும் எதிரானது.

4) ஆரம்ப வருடாந்தர விலைப்பட்டியல்/ விலைகூறல் (மிகினி) எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு பிரித்தல், உரமாக்கல் மற்றும் மறுசுழற்சிக்கே செல்ல வேண்டிய நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு குப்பைகளைப் பிரித்து திரட்டுதலைத் தாண்டி எந்த ஒரு பொறுப்பும் தரப்படவில்லை.

744 கோடி ரூபாய் ஒப்பந்தமானது 1,2,3 மற்றும் 7 மண்டலங்களில் நாளொன்றிற்கு ஒரு டன் குப்பைக்கு ரூ.2,960 வீதம் 8 வருடத்திற்கு மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது அனைத்து குப்பையையும் கொடுங்கையூருக்குக் கொண்டு செல்லப்பட்டால் உண்டாகும் செலவாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அருகாமையிலேயே குப்பை பிரித்து மக்கவைத்தோ மறு சுழற்சியோ செய்யப்பட்டால் இவ்வளவு செலவு ஏற்படாது.

5) அரசின் ஒப்பந்ததாரர், மக்களிடமிருந்து பிரிக்கப்படாத குப்பையை 12 மாத காலம் வரை திரட்டலாம் என டென்டர் கூறுகிறது. 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அந்நாளிலிருந்து 24 மாத காலத்திற்குள் குப்பைகளை பிரித்தே மக்களிடமிருந்து பெற வேண்டுமே தவிர ஒப்பந்த காலத்திலிருந்து அல்ல. எனில் அக்காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது.

தற்போது குப்பைகளை மக்களிடமிருந்து பிரித்து மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். 6) 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்களிடமிருந்து குப்பைகளை பிரித்து மட்டுமே திரட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விதியின் 15வது புள்ளியில் எந்தெந்த குப்பை எந்தெந்த வகையில் பிரிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு வரையருக்கப்பட்டுள்ள முக்கிய செயல்திறன் காட்டிகளில், குப்பைகளை பிரித்து எடுப்பது சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குப்பை வண்டிகளில் உலர்ந்த மற்றும் ஈரமான குப்பைகளுக்கான பிரிவுகள் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்லாத செயல்திறன் காட்டியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முக்கிய செயல்திறன் காட்டியாக ஆக்கவில்லையென்றால், குப்பைகளை பிரித்து வாங்குவது தோல்வியிலேயே முடியும்..

7) இந்த ஒப்பந்தங்களின்படி, இரண்டாம் நிலை சேமிப்பு இடங்களாக, குப்பை தொட்டிகளே இருக்கும் என்று தெரிகிறது. இரண்டாம் நிலை பிரித்தல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் ரோட்டில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளை அகற்ற எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் இணையாமல் பொதுமக்கள் பலர் எப்போதும் போல பிரிக்கப்படாத குப்பையை குப்பை தொட்டியில் போடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

மேலும் ரோட்டோரம் இருக்கும் குப்பை தொட்டியில் மக்காத குப்பையில் இருந்து மறுசுழற்சிப் பொருள்களை மீட்க முடியாது. குப்பை பொறுக்குபவர்கள் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள் பணியாற்றும் அளவுக்கு போதுமான இட வசதியுடன் கூடிய பொருள் மீட்பு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று திடக் கழிவு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இல் கூறப்பட்டுள்ளதற்கு புறம்பாக உள்ளது.

8) ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன்-படி முக்கிய செயல்திறன் காட்டிகளில், அடிப்படையானவற்றில் தொடர்ந்து 90 நாட்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு விடப்பட்ட பகுதியை மாநகராட்சி மீட்க முடியும். இதன்படி ஒப்பந்ததாரர் 89 நாட்கள் சரியாகச் செயல்படாமல் இருந்துவிட்டு ஒரு நாள் சரியாகச் செயல்பட்டால் கூட ஒப்பந்தம் தொடரும். இவ்வகையில் சரியாக செயல்படாமலேயே 8 வருட காலம் ஒரு ஒப்பந்ததாரர் தொடர்ந்து கொண்டு, மக்களை பெரும் இன்னலில் தள்ள முடியும்.

9) ஒப்பந்தத்தில் புகார்கள் நிவர்த்தி செய்யும் நடைமுறைகளை ஒப்பந்ததாரரே ஏற்று செயல்படுத்துவார் என்று உள்ளது. தற்போது இது மாநகராட்சி-வசம் உள்ள போதே புகார்களை நிவர்த்தி செய்து கொள்வதில் பல சவால்கள் உள்ளன. புகார் தெரிவிக்கும் மக்களை ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர்கள் மிரட்டுதல், புகார் செய்பவர் போன் எண்களை பாதுகாத்துக் கொள்ளும் வசதி இல்லாதது,

நிவர்த்தி செய்யப்படாத ஓரு புகாரை இரண்டாம் முறை திறக்க வசதி இல்லாதது, வேறு பகுதிகளில் எடுத்த புகைப்படங்களைப் அதிகாரிகள் பதிவிட்டு புகார் நிவர்த்தி செய்யப்பட்டதாகக் காண்பித்தல் ஆகிய முறைகேடுகள் நடக்கின்றன. ஆக ஒப்பந்த்தாரரிடமே புகார் தெரிவிக்கும் நடைமுறை கொடுக்கப்பட்டால் நிலமை இன்னும் மோசமாகும்.

10) ஒப்பந்தத்தின்படி இரண்டாம் நிலை குப்பை சேகரிக்கும் வாகனங்களிலும், இயந்திர துப்புரவு வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருக்கும். வீடு வீடாக குப்பை சேகரிக்கும் இ-ரிக்‌ஷா வாகனங்களில் இந்த வசதி சந்தேகத்திற்கு இடமான வகையில் குறிப்பிடப்பாடாமல் உள்ளது. குப்பை பிரித்தலுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதற்கும், பிரிக்கப்படாத குப்பையை தெரு முனைகள், ஆறு, கால்வாய்களில் கொட்டாமல் இருப்பதற்கும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி தவறாமல், குறித்த நேரத்தில் நடப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வளவு முக்கியமான பணி சிறப்பாக நடப்பதை உறுதி செய்ய நிறிஷி வசதி மிகவும் அவசியமாகிறது. வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி மற்றும் திடக் கழிவை பிரித்துக் கையாள்வதை திறம்பட நிர்வகிப்பதில் மாநகராட்சிக்கு அர்பணிப்பு இல்லையோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. தற்போது செல்போன் தொழில்நுட்பம் நம்பகமானதாகவும் விலை குறைவாகவும் இருக்கிறது. கால் டாக்சி நிறுவனங்கள் கூட இதையே பயன்படுத்துகின்றன.

11) மேலும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ல் கூறப்பட்டுள்ளது போல பேக்கிங் பொருட்களை உற்பத்தியாளர்கள் செலவிலேயே தனித்தனியாக பிரித்து அவர்களிடமே கொடுக்கும் விதமான எந்த திட்டமும் இந்த ஒப்பந்த்ததில் இல்லை. சுமார் 4000 கோடி மதிப்புள்ள இந்த மூன்று ஒப்பந்தங்களே சென்னையின் திடக் கழிவு எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

ஆனால் மேலே குறிப்பிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இது செயல்படுத்தப்பட்டால், சென்னையில் திடக் கழிவு பிரித்தலின் அளவிலோ, பெருங்குடி கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லபப்படும் திடக் கழிவின் அளவிலோ பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த ஒப்பந்தங்கள் இதுவரை இருந்து வந்துள்ளது போன்ற சென்னை மாநகராட்சியின் திடக்கழிவை இடம் பெயர்க்கும் திட்டம் தானே தவிர, திடக் கழிவை மேலாண்மை செய்யும் திட்டம் இல்லை.

அது மட்டுமல்ல, இந்த டென்டர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்திற்கும் புறம்பாக உள்ளது. எனவே இந்த டெண்டெர்களை திரும்பப்பெற்று மேற்கண்ட பிரச்சனைகளைக் களைய வேண்டும். முதலில் பரவலாக்கப்பட்ட (வார்டு/பகுதி வாரியான) மக்கும் குப்பைக்கான உரக் கிடங்குகள், பயோ மீதேனேஷன் அமைப்புக்கள் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் மையங்கள் என மொத்த திடக் கழிவையும் கையாளும் கொள்ளளவில் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான டெண்டர்கள் முதலில் விடப்பட வேண்டும். மிகக் குறைந்த சதவீத எஞ்சிய கழிவுகள் மட்டுமே நிலப்பரப்புகளில் கொட்டுவதற்காக கொண்டு செல்லப்பட வேண்டும். ஒவ்வொரு வகை குப்பைகளையும் கையாளுவதற்கு போதுமான மொத்த கொள்ளளவையும் எட்டுவதே அரசின் உடனடி நோக்கமாகவும் பணியாகவும் இருக்கவேண்டும். அதற்கான வேலைகள் செய்த பிறகே அந்தந்த குப்பை கையாளும் மையங்களுக்கு குப்பைகளை எடுத்து செல்லும் நீண்ட காலம் டென்டர்கள் விடப்பட வேண்டும்.

மேலும் இத்தகைய டெண்டர்கள் மாநகராட்சி மண்டல வாரியாக விடும் போது செயல்திறனை உறுதி செய்தல் மற்றும் சரியாக செயல்படாத ஒப்பந்த்தாரரை மக்களுக்கு பெரிய பாதிப்பின்றி மாற்றுதல் போன்றவை எளிமையாகும். மண்டல வாரியான ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு பணி தரமாக நடைபெறும். தற்போது உள்ளது போன்ற ஆயிரக்கணக்கான கோடிக்கான பெரிய டெண்டர்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவற்றை அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.