40 வயதில் பிரசவ வலி..! ஒரே நேரத்தில் பிறந்த 4 குழந்தைகள்..! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய கர்ப்பிணி பெண்!

3 பிள்ளைகளின் தாயான பெண் ஒருவருக்கு சோதனை குழாய் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் சகன்லால் – தாலிபாய்(40) தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். ஆசைக்கு, ஆஸ்திக்கு என குழந்தைகள் இருக்க குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபாய் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

இவர்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்று புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். மற்றொரு மகள் மாற்றுத் திறனாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவர்களது மகன் சமீபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த தம்பதி மற்றொரு மகளும் திருமணம் ஆகி சென்றுவிட்டால் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று ஏங்கினர்.

தங்களுக்கென ஒரு மகனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர். ஆனால் தாய்பாலிக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிட்டதால் என்னவென்று தெரியாமல் மருத்துவரை அணுகினர். பின்னர் அவர்கள் அறிவுரையின் படி சோதனை குழாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்தனர்.

இதை அடுத்து டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கான ஏற்பாடுகள் தாலிபாய்க்கு செய்யப்பட்டது. இதை அடுத்து தாலிபாய் கருத்தரித்தார். நேற்று முன்தினம் பிரசவ வலி எடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாலிபாய் –சகன்லால் தம்பதிக்கு அதிர்ச்சியும், ஆனந்தமும், ஆச்சரியமும் காத்திருந்தது.

தாலிபாய்க்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு மகன் பெற்றெடுக்க நினைத்த தம்பதிக்கு தற்போது 4 குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆனது.