ஆரம்பிச்சுட்டாங்கப்பா, கொரோனா வைரஸ் பற்றி 40 ஆண்டுக்கு முன்பே புத்தகம் வந்தாச்சாம்...

புயல் அடித்தாலும், பெருவெள்ளம், சுனாமி ஏற்பட்டாலும், இதுபற்றிய குறிப்பு முன்னரே இருக்கிறது என்று பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக் காட்டுவது நம்மூர் ஸ்டைல் என்றால், இன்றைய நிலவரத்துக்கு ஏற்ப பழைய புத்தகத்தை எடுத்துப்போடுவது மேலை நாட்டு ஸ்டைல்.


அந்த வகையில் இப்போது உலகையே மிரட்டி வருகிறது, கொரோனா வைரஸ். இப்பை ஒரு உயிர்க்கொல்லி நோயால் உலகத்துக்கு ஆபத்து நேரிடும் என்று சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "த ஐஸ் ஆஃப் டார்க்னஸ்" என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைகோபுர தாக்குதல் நடந்தபோது, இந்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பற்றி அதிதீவிரமாக செய்திகள் பரவின. இப்போது அப்படிதான் 'தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ்' நாவலை எழுதிய டீன் கூன்ட்ஸ் நினைவு கூறப்படுகிறார்.

இந்த நாவலின் 39வது அத்தியாயத்தில் 'வுஹான் 400' வைரஸ் என ஒரு வைரஸ் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாவலில் வுஹான் வைரஸ் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு உலகை அழிக்கிறது. அந்த வைரஸ் விளையாட்டை மையமாக வைத்துத்தான், த ஐஸ் ஆஃப் டார்க்னஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இப்போது அந்த புத்தகத்தை மளமளவென டவுன்லோடு செய்து படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பெருகிவருகிறது. இலவச சுற்றாகவும் அந்த நாவல் கிடைக்கிறது. படிச்சுத்தான் பாருங்களேன்.