ஒரே ஒரு குடும்பத்தில் 40 வாக்காளர்கள்! அந்த வீட்டையே சுற்றிச்சுற்றி வரும் வேட்பாளர்கள்!

ஓசூர் அருகே ஒரே குடும்பத்தில் உள்ள 40 வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளுவதற்கு வேட்பாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எட்டப்பள்ளி என்ற ஊரில் 4 தலைமுறைகளாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் குண்டேகவுடு குடும்பத்தினர். சிறியவர்கள், பெரியவர்கள் என 60 பேர் உள்ள இந்த குடும்பமே ஊரிலேயே மிகப் பெரியது. 60 பேர் கொண்ட இந்த கூட்டுக்குடும்பம் தற்போது அனைவரது கவனத்தையும், மரியாதையும் பெற்றுள்ளது.

மனிதர்களாலும், அன்பாலும் நிறைந்திருக்கும் இந்த வீட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஊரில்‌ 200க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 40 பேர் குண்டேகவுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் ஆச்சரியம். இந்த வீட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயேச்சை என எந்ததொரு வேறுபாடுமின்றி மொத்த வாக்குகளையும் அப்படியே அள்ள துடிக்கின்றனர் வேட்பாளர்கள்.

குடும்ப உறுப்பினர்கள் படிப்பு, வேலை நிமித்தமாக வெளிநாடுகள்‌, வெளிமாநிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கட்டாயம் வாக்க‌ளிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலின் போது அனைவரும் சொந்த ஊருக்கு வருகை தருகின்றனர். எங்கு இருந்தாலும் தேர்தலின் போது சொந்த ஊருக்கு வந்துவிடுவதை குண்டேகவுடு குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்