விதவிதமாக சாப்பிட்டால் 40 வகையான ஊட்டச் சத்து கிடைக்கும் தெரியுமா?

குடும்பத்தில் அனைவருக்கும் சத்தான உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவதற்கு பெண்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் தினமும் கீரை, பருப்பு, முட்டை போன்றவை சமையலில் இடம்பெறச் செய்வார்கள்.


சத்து நிறைந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என நினைக்கக்கூடாது. ஏனென்றால் உடல் நலன் சிறப்பாக அமைவதற்கு சுமார் 40 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவை எல்லாமே குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களில் இருந்து கிடைத்துவிடாது.

கீரை சத்தான உணவு என்றாலும் அதனை மட்டுமே தொடர்ந்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளாமல் அனைத்துச் சத்து உணவுகளையும் சாப்பாட்டில் இடம்பெறச் செய்யவேண்டும். ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும்.

வெள்ளிக் கிழமை என்றால் சாம்பார் வைக்கும் பழக்கத்தை மாற்றமுடியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் வெங்காய சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், பூசணி சாம்பார் என்று மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இதுதவிர ஒரே மாதிரி சமைத்து சாப்பிடுவது போரடித்துவிடும்.

இவற்றைவிட முக்கியமான விஷயம் தங்கள் குழந்தை மூக்குப்பிடிக்க சாப்பிடவேண்டும் என்று தாய்மார்கள் ஆசைப்படுவார்கள். இது சரியல்ல. மிதமான உணவே போதுமானது. அன்பினால் தாய் கொடுக்கும் அளவுக்கு அதிகமான உணவே குழந்தையின் உடலுக்கு எதிரியாக மாறிவிடக் கூடாது. அதனால் அளவோடு உணவு கொடுத்து வளமோடு வாழச்செய்யுங்கள்.