சிறுத்தையிடம் சிக்கிய 4 வயது தம்பி! புலியாக பாய்ந்து சென்று காப்பாற்றிய 11 வயது அக்காள்! ஆனால் பிறகு ஏற்பட்ட பரிதாபம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுத்தையுடன் போராடி 4 வயது தம்பியை சிறுமி காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


உத்தரகாண்ட் மாநிலம் பாவ்ரி மாவட்டம் தேவ்குண்டாய் தள்ளி கிராமத்தில் சிறுமி ராக்கி வசித்து வருகிறார். ராக்கி கடந்த 4ம் தேதி வீட்டிற்கு அருகே தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுத்தை ராக்கியின் தம்பியை தாக்க முயன்றது.

இதனால் சிறுவன் பயந்து போய் என்னவென்று செய்வதறியாது உறைந்து நின்றான். தம்பி ஆபத்தில் இருப்பதை பார்த்த ராக்கி தம்பி உயிரை காப்பாற்ற தன்னுடைய உயிரை பணயம் வைத்தார். அப்போது அருகில் வந்த சிறுமியை பார்த்த சிறுத்தை அவரை கடித்து குதறியது. 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்த சிறுமியின் உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் சிறுத்தையை துரத்தினர். இதையடுத்து பயந்துபோன சிறுத்தை பின்னர் ஓடி காட்டுக்குள் சென்று விட்டது. தம்பியை காப்பாற்ற முயன்ற சிறுமிக்கு கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதை அடுத்து அந்த சிறுமி முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி மருத்துவமனையிலும் சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் உத்தரகாண்ட் மாநில வனத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜை அணுகி உதவி கோரினர். இதையடுத்து சிறுமி ராக்கி, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.

மேலும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதுல் கூறிய அமைச்சர் அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். இதுமட்டுமின்றி சிறுமி ராக்கி குடும்பத்தாரிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

சிறுமி ராக்கியின் துணிச்சலை பாராட்டிய பாவ்ரி மாவட்ட நீதிபதி , சிறுமி ராக்கி வீர பதக்கம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.