கரோனா கிருமி தாக்கியதில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தாக்கத்தில் 4 பேர் தனி வார்டில் வைப்பு - தற்காப்பு வசதி இல்லையென டாக்டர்கள் குமுறல்

அவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு இப்போதைக்கு தனித்து வைக்கப்பட்டிருப்பினும் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் உள்பட்ட பிற மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. முன்னதாக, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த இரண்டு சீனத்தவரும் சீனாவில் படித்துவந்த தமிழகம் திரும்பிய இரு மாணவர்களுமே அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசரச் சிகிச்சை, உடனடிச் சிகிச்சை, காயசிகிச்சை ஆகியவற்றுக்கான பிரிவுகளைக் கொண்ட புதிய கட்டடத்தொகுதியின் முதல் தளத்திலேயே கரோனா தாக்கத்துக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருப்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காத வடசென்னையில் எப்போதும் மக்கள்கூட்டம் வழியும் இந்த மருத்துவமனையில் தனிப் பிரிவுக்கான அடிப்படை முக்கியத்துவத்தைக்கூட பின்பற்றவில்லை என மருத்துவர்கள் குமுறுகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நோய்த் தடுப்பு மையம் ஆகியவற்றின் வழிகாட்டல்கள், இதில் பின்பற்றப்படவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால், கரோனா தாக்க சந்தேகத்துக்கு உள்ளான காய்ச்சல்காரர்கள் 32 பேரின் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று உறுதியானதை செய்தியாளர்களீடம் விவரித்த சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா இராஜேஷ், மாநில அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11 பேர் தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நிறுத்திக்கொண்டார்.