நீட் மோசடியில் மேலும் 4 மாணவர்கள்! வெளிநாட்டுக்கு தப்பியோடும் வி.ஐ.பி.கள்?

ஆள் மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிக்கியதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் , மேலும் பலரும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உறுதியானது.


சிக்கிகொள்வோம் என்ற பயத்தில் மாணவர்களும், பெற்றோரும் வெளிநாட்டுக்கு தப்பியோடுவதாக தகவல் தெரியவந்துள்ளது.உதித் சூரியாவின் தந்தை டாக்டர் வெங்கடேசனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணை செய்ததும், இர்பான், பிரவின், அபிராமி, ராகுல் ஆகிய நால்வரும் ஆள்மாறாட்டம் நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதற்கு இடைத்தரகர்கள் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது. இந்த தரகர்கள் மும்பையில் இருப்பதாகவும், திருவனந்தபுரம், டெல்லி போன்ற இடங்களில் ஆட்கள் மூலம் தேர்வு எழுத வைப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் பிரவீனிடம் விசாரணை முடிந்ததை அடுத்து அவரும் அவரது தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற இர்பான், அபிராமி, ராகுல் ஆகிய நால்வரிடமும் விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. 

வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் இப்போது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்னமும் முழுமையான ஆவணங்களை கல்லூரியில் ஒப்படைக்கவில்லை என்பதுதான் பிரச்னையாக மாறியுள்ளது. குடல் இறக்கம் நோய்க்காக சிகிச்சை பெறவேண்டும் என்று தலைமறைவாகி இருக்கிறார் இர்பான். அவர் குடும்பத்தோடு வெளிநாடு தப்பிச்சென்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் இன்னமும் பெயர் வெளிவராத மாணவர்களும், இப்போதே வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் விமான நிலையங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் இந்த ஒரே புரோக்கர்தான் உதவிசெய்துள்ளார். அதனால், அவரை பிடித்துவிட்டால், ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் மடக்கிவிடலாம் என்று போலீஸ் கருதுகிறது. நடக்கிறதா என பார்க்கலாம்.