பெங்களூரில் இருந்து வார விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் கார் கர்நாடக அரசு பேருந்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்
இப்படி ஒரு கோர விபத்து நிகழுமா? விடுமுறையை கொண்டாட சென்ற கணவன் - மனைவி - குழந்தைகளுக்கு நேர்ந்த பயங்கரம்!

பெங்களூரு குமாரசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சாகர் என்ற 8 வயது மகனும் சுகன்யா என்ற 6 வயது மகளும் இருந்தனர் வார விடுமுறையை சொந்த ஊரான ஹெப்பகாவடி கிராமத்தில் கழிப்பதற்காக இவர்கள் தங்களது காரில் புறப்பட்டுச் சென்றனர்.
பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கெஜ்ஜலகெரே என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மீது மோதிய கார், சாலையை கடந்து எதிர் மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த கர்நாடகா மாநில அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் காரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாரும் அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு இடையே காரின் சிதைவுகளுக்கு நடுவிலிருந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த விபத்தை கண்டு பேருந்தில் பயணம் செய்த சில கல்லூரி மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
தங்கள் வாழ்நாளில் இது இதுபோன்றதொரு கொடூரமான விபத்தை கண்டதில்லை என்றும் தங்கள் கண் முன்னே சில வினாடிகளில் ஒரு குடும்பமே அழிந்ததை காண நேர்ந்ததாகவு பயணிகள் வேதனை தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்