பிரனேஷ காப்பாத்த போனாங்க..! ஆனால் நான்கு பேருமே..! 80 அடி ஆழ பவானிசாகர் அணையில் நண்பர்களுக்கு நிகழ்ந்த பயங்கரம்!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்த்தேக்க அணையில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் உள்ள மன்னூர் என்ற கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களான பிரனேஷ், எஸ்வந்த், கதிரேசன், ரகுராம், சுரேஷ் ராஜ் ஆகிய 5 பேர் பவானிசாகர் நீர் தேக்க பகுதியான சித்தன் குட்டைக்கு வந்துள்ளனர். அப்போது பிரனேஷ் என்ற கல்லூரி மாணவர் நீரில் இறங்கி நீச்சல் தெரியாமல் மூழ்கினார். அவரை காப்பாற்றுவதற்காக உடன்வந்த நான்கு பேரும் நீரில் இறங்கி முயற்சி செய்ததில் எஸ்வந்த், கதிரேசன், ரகுராம் ஆகிய 3 பேரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.

இந்த சம்பவத்தை கண்ட கல்லூரி மாணவர்களில் ஒருவரான சுரேஷ் ராஜ் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசாரின் உதவியுடன் நீரில் மூழ்கிய 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். 

கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.