நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! மேலும் ஒரு மாணவி, 3 மாணவர்கள் கைது?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் சேர்ந்த புகாரில் மேலும் 4 மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவருக்கு உதவிய அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகியுள்ளார். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் போது கேரளா திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மூலமாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருவனந்தபுரம் சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வந்த ஜோசப் என்பவரிடம விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் மேலும் நான்கு பேர், ஒரு மாணவி மற்றும் மூன்று மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் சேர்ந்துள்ள தகவல் தெரியவந்துள்ளத- இதனை அடுத்து அவர்களின் ஆவணத்தை தொடர்புடைய மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நான்கு பேரையும் விசாரணைக்கு வருமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியதாக கூறுகிறார்கள். அதே சமயம் அந்த நான்கு பேரையும் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்து தேனிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது குறித்து சிபிசிஐடி நாளை விரிவாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.