15 வயசு அக்காவை விட 13 வயசு தங்கச்சி தான் வேணும்! 30 வயது ஆணுக்கு தாரை வார்க்கப்பட்ட விபரீதம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 7ம் வகுப்பு படித்து வந்த மாணவியை 30 வயது நபருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு 15 வயது ஆகிறது. மூத்த மகளுக்கும் ஆந்திர மாநிலம் கடப்பகுண்டாவை சேர்ந்த கோபிநாத் என்ற 30 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். கூலித்தொழிலாளி வறுமையில் வாடுவதால் பணக்கார சம்மந்தம் வந்துவிட வேறு வழியின்றி சம்மதித்துள்ளார்.

ஆனால் மூத்த மகளுக்கும், அந்த நபருக்கும் ஜாதகம் பொருந்தவில்லை. இந்நிலையில் 7ம் வகுப்பு படிக்கும் இளைய மகளின் ஜாதகத்தை பார்த்துள்ளனர். 30 வயது நபருக்கும் 12 வயது சிறுமிக்கும் ஜாதகம் பொருந்திப் போனதால் திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் சம்மதித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தான் படிக்க வேண்டும், எனவே திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் சித்தூர் அருகே உள்ள கோவிலுக்கு கட்டாயமாக அழைத்து சென்று கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் கல்விச் சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கி வந்துவிட முடிவு செய்து சிறுமியின் தாலியை கழட்டி வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற சிறுமி தனிமையில் ஆசிரியரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி உள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்க, அவர்களும் காவல்துறைக்கு தகவல் அளிக்க தற்போது சிறுமி மீட்கட்பபட்டுள்ளார். இதையடுத்து புதுமாப்பிள்ளை கோபிநாத், மாணவி, மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சித்தூர் மாவட்ட எஸ்.பிக்கு வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி பரிந்துரைத்துள்ளார்.