தந்தையின் ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.30 லட்சம் கந்துவட்டி! தட்டிக்கேட்ட மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

3 லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு 30 லட்ச ரூபாய் வரை வட்டி மட்டுமே வசூல் செய்த கந்துவட்டி கும்பல் கடன் பெற்றவரின் மகனை கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளது.


கும்பகோணம் பத்துக்கட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் 5 ஆண்டுகளுக்கு  செந்தில் மற்றும் அவரது சகோதரர் பாலகுருவிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 

வாங்கிய கடனுக்கு 5 ஆண்டுகளாக சிவசுப்ரமணியன் வட்டி செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு மேல் வட்டியாக மட்டுமே சிவசுப்பிரமணியன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

ஆனால் அசல் பணம் 3 லட்ச ரூபாய் கேட்டு தொடர்ந்து செந்தில் மற்றும் அவரது சகோதரர் மிரட்டி வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த வாரம் சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்ற செந்தில் அவரது மகள்களிடம் தரம் தாழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சிவசுப்ரமணியம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால் மீண்டும செந்தில் அசலை கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அப்போது அருகில் இருந்த சுப்பிரமணியத்தின் மகன் தந்தையை மிரட்டிய கந்துவட்டிக் கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரத்தில் இருந்த கந்துவட்டி கும்பல் மளிகைக் கடையில் அமர்ந்திருந்த அருணை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.