ஓடும் ரயில் முன் நின்று விபரீத செல்ஃபி! 3 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ரயில் தண்டவாளத்தில் விதவிதமான கோணங்களில் செல்ஃபி எடுத்த 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.


உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த உறவுக்கார இளைஞர்கள் சாமன், கி‌ஷண், சன்னி. இவர்கள் மூவரும் உறவினர் ஒருவர் இல்லத் திருமணத்துக்காக டெல்லி சென்றனர். அவர்களுடன் தினேஷ் என்பவரும் சென்றிருந்தார். 

டெல்லி பானிபட் பூங்காவில் அவர்கள் நேற்று மாலை பல்வேறு கோணங்களில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த வழியாகச் சென்ற தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற போது அது தான் தங்கள் இறுதிப் பயணத்துக்கான பாதையாக இருக்கப் போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை 

தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு விரைவு ரயில் அவர்கள் கண்களில் பட்டது தூரத்தில் அந்த ரயிலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு திருப்தி அடையாமல் ரயில் ஒரளவு அருகில் வரக் காத்திருந்து செல்ஃபி எடுத்தனர். இந்நிலையில் செல்ஃபி ஆர்வத்தில் ரயில் அருகாமையில் வந்ததை அவர்கள் உணரத் தவறிய நிலையில் ரயில் அவர்கள் மீது மோதி தூக்கி எறிந்து விட்டுச் சென்ற நிலையில் தினேஷ் மட்டும் கடைசி வினாடியில் சுதாரித்து உயிர் தப்பினார். 

மற்ற மூன்று பேரின் உடல் பாகங்கள் சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு சிதறிக் கிடந்தன. இதையடுத்து பதறி ஓடி வந்த அக்கம்பக்கத்தினரால் செல்ஃபி மோகத்தில் மூவரும் உயிரிழந்ததைக் கேட்டு பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.