யாராவது காப்பாத்துங்களேன்..! கதறிய 3 பெண்களையும் காப்பாற்றி உயிரை தியாகம் செய்து சகோதரர்கள்! வைகை ஆற்றில் பரிதாபம்!

ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த சகோதரிகளை காப்பாற்ற முயன்ற உடன்பிறப்புகள் உயிரிழந்த சம்பவமானது நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை எனும் இடம் அமைந்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜெகன் மற்றும் குமரேசன் ஆகியோர் வசித்துவந்தனர். இவர்கள் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். 

இவர்கள் குடும்பத்தினருடன் நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இறைவனை வணங்கிவிட்டு குடும்பத்தினர் வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது வைகையாற்றின் சுழலில் சிக்கிக்கொண்ட 3 பெண்கள் காப்பாற்றுமாறு அலறியுள்ளனர்.  

உடனடியாக சகோதரர்கள் இருவரும் அவர்களை காப்பாற்றுவதற்காக வைகை ஆற்றில் குதித்து போராடியுள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சகோதரர்கள் பெண்களை மீட்டு கரையோரத்தில் சேர்த்தனர். 

ஆனால் சகோதரர்கள் கரையின் மறுபக்கத்திற்கு திரும்ப முயற்சித்தபோது அலை சூழலில் சிக்கி கொண்டனர். பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் துருதிர்ஷ்டவசமாக சகோதரர்களை மீட்க இயலவில்லை. இருவரின் சடலங்களையும் மீட்புப்படையினர் கரை சேர்த்தனர். 

இந்த சம்பவமானது வைகை ஆற்றங்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பருவமழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் பொதுமக்களை ஆற்றில் குளிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஆனால் அவற்றை பொதுமக்கள் மதிக்காமல் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.