ஏசி வெடித்து 3 பேர் பலியான விவகாரம்! சொத்துக்காக கொலை என பகீர் தகவல்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த இம்மாதம் 4-ஆம் தேதியன்று  தொடங்கியது.வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஏசி ரூமில் பதுங்குகின்றனர்.


இந்நிலையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்  திண்டிவனம் அமைந்துள்ளது. அருகே உள்ள காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ் என்பவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், கௌதம் என்ற மகனும் உள்ளனர்.

மூவரும் தங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஏசியில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த அறை தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.இதைப்பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஏசியில் மின் கசிவு ஏற்பட்டதே தீவிபத்திற்கும், உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் முதியவர் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து எப்படி ரத்தம் வழிந்தது என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில்  காலி மண்ணெண்ணெய் கேன் கிடந்தது போலீசாரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ராஜூக்கு, அதிகம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே சொத்துப் பிரச்சனையில் ராஜூ, அவரது மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ராஜுவின் மூத்த மகனான கோவர்த்தனனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.