ஒரு நாள் இந்துவாக மாறிய 3 முஸ்லீம்கள்! தந்தையின் பிராமண நண்பருக்காக செய்த நெகிழ வைக்கும் செயல்!

அகமதாபாத்: தங்களது குடும்ப நண்பரான பிராமணர் உயிரிழந்த நிலையில் அவருக்கு இந்து முறைப்படி முஸ்லீம்கள் இறுதிச்சடங்கு செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியை சேர்ந்தவர் பானுஷங்கர் பாண்டியா. கூலித் தொழிலாளியான இவர், ஒரு பிராமணர். இவரது நண்பர் பிகு குரேஷி, ஒரு முஸ்லீம். பானுஷங்கர் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த நிலையில், பிகு குரேஷி திருமணம் செய்துகொண்டார். நண்பர்கள் இருவரும் 40 ஆண்டுகளாக, இணை பிரியாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்திருந்தாலும், மிக நெருங்கிய நண்பர்களாக பழகிய நிலையில், பானுஷங்கருக்கு காலில் அடிபட்டதால், நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை குரேஷி தனது வீட்டிலேயே வைத்து பராமரித்து வந்தார். இந்த விசயத்தில் குரேஷியின் சகோதரர்கள் அபு, நஷீர், ஜூபர் மற்றும் நஷீரின் மகன் அர்மான் என அனைவரும் ஒன்று சேர்ந்து அக்கறை காட்டியுள்ளனர்.

பானுஷங்கருக்காக நாள் தவறாமல் சைவ உணவு தயாரித்து பரிமாறுவதை குரேஷி குடும்பத்தினர் வழக்கமாகவும் செய்திருக்கிறார்கள்.  இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக, பானுஷங்கர், தனது நண்பனின் குடும்பத்தையே தனது குடும்பமாக தத்தெடுத்துக் கொண்டார்.

எனினும், மரணம் கொடியதாயிற்றே! 3 ஆண்டுகளுக்கு முன்பாக பிகு குரேஷி உடல்நலமின்றி காலமானார். அன்று முதல் மனம் உடைந்து போன பானுஷங்கர் மரண படுக்கையில் வீழ்ந்தார். உடனே அவருக்கு, இந்து மத முறைப்படி கங்கை நீர் கொண்டுவந்து, குரேஷியின் சகோதரர்கள் கொடுத்தனர். எனினும், சில நாள் முன்பாக அவர் இறந்துவிட்டார்.

வாரிசு இல்லாத அவருக்கு, குரேஷியின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் மகன்கள் ஒன்று சேர்ந்து, இந்து மத முறைப்படி, இறுதிச்சடங்குகள் செய்தனர். இஸ்லாமியராக இருந்தாலும், வேளை தவறாமல் தொழுகை செய்வது, ரம்ஜான் விரதத்தை பின்பற்றுவது என அனைத்திலும் மிக ஒழுக்கம் காட்டும் குரேஷி குடும்பத்தினர், உடலில் பூணுல் அணிந்துகொண்டு, ஒரு பிராமணருக்கு இறுதிச்சடங்குகள் செய்த காட்சி, அப்பகுதி மக்களை வியக்கச் செய்துள்ளது.

மத ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் என பலரும் பாராட்டுகின்றனர்.