புதுச்சேரியில் இருந்து பெட்டி பெட்டியாக மதுபானம் கடத்தல்! வசமாக சிக்கிய ஃபரீனா டிராவல்ஸ்!

பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு மது கடத்தியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாண்டிச்சேரியில் மதுவின் விலை குறைவாகும். இதனால் அங்கிருந்து சொகுசு பேருந்துகளில் மது வரவழைப்பதாக விழுப்புரம் மண்டலத்தில் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு ஃபரீனா ட்ராவல்ஸ் சொகுசுப் பேருந்துகளில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து இன்று அதிகாலை பாண்டிச்சேரியிலிருந்து வந்த ஃபரீனா ட்ராவல்ஸ் பேருந்தை புலனாய்வுத்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். அப்போது பல்லாவரத்திற்கு அருகே பேருந்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மதுபாட்டில்கள் மாற்றப்பட்டதை காவல்த்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக வாகனத்தை மடக்கி பிடித்த காவல்துறையினர் 610 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பேருந்தை ஓட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஓட்டுநரான தமிழ்மணி என்பவரையும், கார் ஓட்டுநரான ரெட்டேரி சேர்ந்த முகமது சாதிக் என்பவரையும், மற்றும் மது பாட்டில்களில் உரிமையாளரான பர்வீன் என்பவரையும் பரங்கிமலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சென்ற மாதம் 28-ஆம் தேதியன்று ஃபரீனா டிராவல்ஸின் மற்றொரு சொகுசு பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.