திருப்பதி ஏழுமலையானிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகியுள்ளது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பதி மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிந்தராஜா சுவாமி கோவில். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தான் கோவிந்தராஜ சுவாமி கோவிலை யும்  நிர்வகித்து வருகிறது.

 

இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடை சாத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன.  ஐந்து நாற்பத்தி ஐந்து மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்ட  போது வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்த 3 தங்க கிரீடங்கள் உட்பட தங்க நகைகள் மாயமாகி இருந்தது கண்டு குருக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

   இவற்றின் மொத்த எடை ஒரு கிலோ 300 கிராம் ஆகும். இந்த நகைகள் அதே கோவிலில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ பத்மாவதி சிலைகளுக்கு அணியப்படுபவை ஆகும். 

 

இதுகுறித்து உடனடியாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவிலுக்கு விரைந்த அதிகாரிகள் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். எப்போதும் பாதுகாப்பு நிறைந்து பக்தர்கள் கூட்டத்துடன் காணப்படும் இந்த கோவிலில் எப்படி தங்க நகைகள் மாயமாயின என்பது அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

   கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது குறித்து காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று காலை சுப்ரபாத சேவை வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த சமயத்தில் கிரீடங்கள் திருடு போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

   மேலும் கோவில் பணியாளர் உதவியுடன் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நாளில் கோவிலில் பணியில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.