ஈஷாவில் கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம் நாள் ‘யக்‌ஷா’ திருவிழா!

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத் சகோதரர்களின் கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சி.


கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழாவின் இரண்டாம் நாளில் ஹைதராபாத் சகோதரர்களின் கர்நாடக வாய்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களின் இனிமையான குரல் வளம் நிகழ்ச்சியை காண வந்திருந்த பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ஹைதராபாத் சகோதரர்களின் குரலிசையோடு பக்க வாத்தியங்களில் வயலின் வித்வான் திரு. VVS. முராரி அவர்களும், மிருதங்க வித்வான் திரு. வீரராகவ பாலாஜி அவர்களும், கஞ்சிரா வித்வான் திரு.கே.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை முற்றிலும் வேறொரு பரிணாமத்திற்கு உயர்த்தினர்.

ஹைதராபாத் சசோதரர்கள் என அழைக்கப்படும் திரு.சேஷாச் சாரி மற்றும் திரு.ராகவாச் சாரி ஆகிய இரு சகோதரர்களும் இணைந்து இந்தியா மட்டுமில்லாது, உலகம் முழுவதிலும் 45 வருடங்களாக கர்நாடக இசை நிகழ்சிகளை வழங்கி வருகின்றனர். மேலும் இவர்கள் அகில இந்திய வானொலியின் முன்னணி இசைக்கலைஞர்கள் ஆவர்.

பால்ய பருவம் முதலே தந்தையார் திரு.D.ரத்தினமாச்சார்யுலு அவர்களிடம் முறையான இசைப்பயிற்சி பெற்ற இவர்கள் இருவரும் தங்களின் சிறப்பான குரல் வளத்தாலும், இசை ஞானத்தாலும் இசை ரசிகர்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இசையுலகில் தங்களுக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கே.பி.ஆர் மில்ஸின் உரிமையாளர் திரு.கே.பி.ராமசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ விழாவின் முதலாம் நாளான (பிப்.18) அன்று உலகின் தலைசிறந்த வயலின் கலைஞர்களில் ஒருவரான திருமதி. கலா ராம்நாத் அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது 

இதனையடுத்து திருமதி.ஷர்மிளா பிஸ்வாஸின் பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சி வரும் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் சூர்ய குண்ட மண்டபம் முன்பாக தினமும் மாலை 6.50 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.