பணியில் சேர்ந்த முதல் நாளே கொரோனா நோயாளிக்கு மருத்துவம் பார்த்த துணிச்சல் மாணவி..! யார் இவர்? நெகிழ வைக்கும் பின்னணி!

இந்தியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா பாதித்தவர்களுக்கு திறம்பட செவிலியராக பணியாற்றி வரும் சம்பவமானது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான மிருதுளா, அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திறம்பட சேவை செய்து வருவதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தின் அரசு செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் இவர், இன்னும் முறைப்படி செவிலியராக தேர்ச்சி பெறவில்லை. மேலும் "இன்டர்ன்ஷிப்" முறையிலேயே செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர்தான் இந்தியாவிலேயே 2-வதாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை பார்த்து வருகிறார். இளைஞர் ஒருவர் சீனா நாட்டின் வுகான் மருத்துவ படிப்பு பயின்று வந்தார். நோய் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்பினார். அப்போது அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ படிப்பு பயின்று வருபவருக்கு, செவிலியராக பணியாற்றிவரும் மிருதுளா சேவை செய்து வருவது அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து மிருதுளா கூறுகையில், "இதுதான் என்னை போன்ற செவிலியர்களின் வாழ்க்கை. கவலைக்கும் அச்சத்துக்கும் நடுவிலேயே நாங்கள் எப்போதும் கடமையாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலரும் மிருதுளாவை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.