திடீரென மாயமான கிறிஸ்தவ பெண் துறவி! ரயில் நிலையத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த உடல்! ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்!

கிறிஸ்தவ பெண் துறவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் கதக் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு குருசாந்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் கோசு மரியா. இத்தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். 2-வது மகளின் பெயர் மேரி சேண்ட்ரா. இவருடைய வயது 26. இவரை சிறுவயதிலேயே கிருத்துவ அமைப்பில் சேர்த்துவிட்டனர். 

அதன் பின்னர் அவர் கிறிஸ்தவ தேவாலயங்களில் போதனைகளில் பங்கேற்று தன்னுடைய சமயம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொண்டார். அதன்பின்னர் கிருத்துவ அமைப்புகள் சார்ந்த பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பெலகாவி, கதக், மைசூர் ஆகிய இடங்களில் கிருத்துவ அமைப்புகளுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இறுதியாக அவர் உப்பள்ளியிலுள்ள ஒரு கிருத்துவ அமைப்பு சார்ந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் அமைந்துள்ள திரு இருதய இயேசு தேவாலயத்தில் போதகராகவும் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக மேரியை காணவில்லை. பல்வேறு இடங்களில் அவருடைய பெற்றோர் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக உப்பள்ளி காவல்நிலையத்தில் மேரியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தேடுதல் பணியை நடத்தினர். அப்போது உப்பள்ளி ரயில்வே நிலையத்தில் மேரியின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டு வீசப்பட்டிருந்ததை கண்ட பொதுமக்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிதறிக்கிடந்த உடற்பாகங்களை மீட்டெடுத்தனர். இறந்தது மேரி தான் என்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேரி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.